பிரதமர் மோடி கோவை வருகை; அண்ணாமலை புறக்கணிப்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று மதியம் விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நைனார் நாகேந்திரன் , முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பலர் வரவேற்பு வழங்கினர். இதைத் தொடர்ந்து அவர்
தனி ஹெலிகாப்டர் மூலமாக கோவை விமான நிலையத்திலிருந்து பாலக்காட்டிற்கு புறப்பட்டு சென்றார். கேரள மாநிலத்தில் வரும் ஒன்பதாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி வருகை தந்திருப்பதாக தெரிகிறது.
பிரதமர் வருகையை தொடர்ந்து கோவையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
# அண்ணாமலை புறக்கணிப்பு
பிரதமர் மோடியை வரவேற்க பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவில்லை. அவர் கோவை காளப்பட்டியில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அவருக்கு இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஏற்பட்ட கடும் அதிருப்தி காரணமாக அவர் வரவேற்க வர மறுத்து விட்டதாக தெரிகிறது. இது பாரதிய ஜனதா கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது
இது தொடர்பாக எம் எல் ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், ” வரவேற்பு பட்டியலில் அண்ணாமலை பெயர் இருந்தது. ஆனால் அவர் ஏன் வரவில்லை என தெரியவில்லை. யாருக்கு சீட்டு என நாங்கள் முடிவு செய்ய முடியாது. கட்சி மேலிடம் டெல்லியில் தான் முடிவு செய்வார்கள். எனவே அறிவிப்பு வந்த பின்னர் தான் யார் யாருக்கு போட்டியிட வாய்ப்பு என தெரியும்,” என்றார்.
