கோவையில் வீட்டிலிருந்து ஓட்டு போட ஏற்பாடு…
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் படி மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வரும் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஒட்டு பதிவு நடைபெறும். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்கும் அனைத்து வாக்காளர்களுக்கும், அவர்கள் வரிசையில் நின்றிருக்கும் நிலையில், வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
வாக்காளர்கள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் வருகை தந்து, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) அல்லது இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 வகையான மாற்று அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் கொண்டு வந்து ஓட்டு போடலாம். நேரில் வாக்களிக்க இயலாத வாக்காளர்களுக்கு வீட்டிலிருந்தே வாக்கு செலுத்தும் (Home Votting) மற்றும் அஞ்சல் வாக்கு (Postal Ballot) பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது:
85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தபால் ஓட்டு போடலாம். நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பப் படிவமான 12ஐ உரிய காலக்கெடுவிற்குள்
விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கி வாய்ப்பளிக்கப்படும். 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அஞ்சல் வாக்கு செலுத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வீடு தேடி சென்று வாக்கு பதிவு செய்யும் முறையில் மேற்கொள்ளப்படும். இந்நிகழ்வுகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெறும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்காளர்களும் தங்களது வாக்குரிமையை தவறாது பயன்படுத்தலாம் என கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
