கோவை சிறையில் கைதிகள் மோதலால் பரபரப்பு…!

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பி பிளாக் 29 வது பிரிவில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை விலாங்கட்டூரை சேர்ந்த சகாதேவன் (33) என்பவர் அடைக்கப்பட்டுள்ளார்.

. இவர் திருப்பூரில் குற்ற வழக்கு தொடர்பாக வழக்கில் கைது செய்யப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இவர் கோவை மத்திய சிறைக்கு கடந்த மாதம் மாற்றப்பட்டார்.

சகாதேவன் அடைக்கப்பட்டு இருந்த பிளாக்கில் பார்த்தா என்கிற சிரஞ்சீவி (35) என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார். பார்த்தாவிற்கும், சகாதேவனுக்கும் திருப்பூர் சிறையில் இருந்தபோது முன் விரோதம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 30ம் தேதி மாலை சிறையில் கைதிகளுக்கு டீ வழங்கப்பட்டது.

அப்போது சகாதேவன் டீ குடிப்பதற்காக சென்று உள்ளார். அங்கு வந்த பார்த்தா, திருப்பூர் சிறையில் நடந்த சம்பவம் குறித்து கேட்டு சகாதேவனிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த பார்த்தா, தனது சிறை நண்பர்கள் கண்ணன் (33), ரியாஸ் (35) ஆகியோருடன் சேர்ந்து சகாதேவனை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறை போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது பார்த்தா, தனது கையில் டம்ளரில் வைத்திருந்த டீயை சகாதேவன் முகத்தில் ஊற்றினார்.

சிறை போலீசார் அவர்கள் 3 பேரையும் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். காயமடைந்த சகாதேவனை சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து காயமடைந்த கைதி சகாதேவன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பார்த்தா என்கிற சிரஞ்சீவி மற்றும் கண்ணன், ரியாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *