வீடு வீடாக பணம் பட்டுவாடா கோவை தேர்தலில் பணமழை…!
கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் உச்சகட்டமாக நடக்கிறது.
மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஓட்டு போட சொல்லி அரசியல் கட்சியினர் பணத்தை வாரி இறைப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுபாட்டு அறைக்கு நேற்று முன் தினம் 58 புகார்கள் பணம் தருவதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று மாலை வரை 47 புகார்கள் என 105 புகார்கள் பதிவானது. பல இடங்களில் பறக்கும் படையினர் விசாரணைக்கு செல்லும் முன் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்து சென்று விட்டதாக தெரிகிறது.
ஒட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளில் அதிகளவு புகார்கள் பெறப்பட்டது. பணம் கேட்டு சில இடங்களில் கட்சியினரை வாக்காளர்களை அணுகுவதாகவும் புகார் பெறப்பட்டிருக்கிறது.
பட்டுவாடாவை தடுக்க முடியாமல் தேர்தல் பிரிவினர் திணறி வருகின்றனர். மாவட்ட அளவில் 180 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை உள்ளது. ஒரு நாளில் ஒரு ஷப்டில் 60 பறக்கும் படை, கண்காணிப்பு படையினர் ஒதுக்கப்பட்ட இடங்களில் பணியாற்றுகின்றனர். புகார்கள் அதிகரித்த நிலையில் இந்த பறக்கும் படையினரால் பணம் வழங்கும் நபர்களை மடக்கி பிடிக்க முடியாத நிலைமை இருக்கிறது.
இதனால் முறைகேடுகள் அதிகமாகி விட்டதாக தெரியவந்துள்ளது. தெற்கு சட்டமன்ற தொகுதியில் உச்ச கட்ட பண பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இங்கே அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பறக்கும் படை (டெடிகேட்டட் பிளையிங் ஸ்குவார்ட்) தயார் செய்ய வேண்டும் என தேர்தல் பிரிவினரே தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
