கோவையில் ஒரு ஓட்டு 5 ஆயிரம் ரூபாய்…! தெற்கு தொகுதியில் கரூர் குரூப்பால் கலக்கம்…
கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் உச்சகட்டமாக நடக்கிறது. மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஓட்டு கேட்டு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் ஓட்டு போட சொல்லி அரசியல் கட்சியினர் பணத்தை வாரி இறைப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிடும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் என வீடு வீடாக கதவைத் தட்டி கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளை வாரி வழங்குவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டுக்கு பணம் தருவது தொடர்பாக புகார் தெரிவித்து கட்சியினர் பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இன்று கோவை மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார் .
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்,” கரூரிலிருந்து 2000 பேர் ஓட்டுக்கு பணம் தருவதற்காக தெற்கு தொகுதியில் இறக்கி விடப்பட்டு இருக்கிறார்கள். ராமநாதபுரம் 80 அடி ரோடு , மநக வீதி உள்பட எட்டு இடங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்த நபர்களை நாங்கள் நேரடியாக பிடித்து தேர்தல் பிரிவில் ஒப்படைத்தோம்.
போலீசிலும் புகார் தெரிவித்தோம். ஆனால் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை. பெரும்பாலான பகுதிகளில் கரூர் குரூப் பணம் கொடுத்து முடித்து விட்டார்கள். வாக்காளர்களை மிரட்டும் வகையில் திமுகவினர் செயல்பட்டு வருகிறார்கள். இப்படி இருந்தால் பொதுமக்கள் ஜனநாயக கடமையை செய்ய முடியாது.
முதலில் ஓட்டு போட சொல்லி அன்பாக சொல்கிறார்கள். மறுத்தால் மிரட்டுகிறார்கள். அவர்களுக்கு ஓட்டு போட வேண்டும் என நிர்பந்தம் செய்கிறார்கள். இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் விரிவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போட்டி போட்டு வழங்குவதாக தெரிகிறது.
கோவை வடக்கு தொகுதியிலும் ஓட்டுக்கு ஆயிரம் முதல் 2000 ரூபாய் வரை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் பணம் பறித்து பொருள்கள் தொடர்பாக இதுவரை 279 புகார் தரப்பட்டிருக்கிறது நேற்று ஒரே நாளில் 58 புகார்கள் பெறப்பட்டது. அனைத்து புகார்களும் பணம் வழங்குவதாக பொதுமக்கள் மற்றும் கட்சியினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 45 புகார்கள் தரப்பட்டிருக்கிறது. ரத்தினபுரி காந்திபுரம் ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக பணம் தருவதாக தேர்தல் பிரிவுக்கு புகார் வந்தது. சில இடங்களில் பரிசு கூப்பன் தொடர்பாகவும் புகார்கள் குவிகிறது. சி விஜில் செயலி மூலமாகவும் புகார்கள் பெறப்பட்டு வருகிறது. காசு கொடுக்கும் நபர்களை தேர்தல் பிரிவினர் தடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
