கோவையில் கொட்டியது மழை கட்டானது மின்சாரம்…
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது.
இந்த நிலையில் இன்று இரவு காற்றுடன் மழை பெய்தது. தொண்டாமுத்தூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, ஆலாந்துறை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
பல இடங்களில் வெள்ள நீர் பாய்ந்து ஓடியது. வறட்சியால் தவித்து வந்த விவசாயிகள் மழையின் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை மலையை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
சிறுவாணி அணை மற்றும் பில்லூர் அணையில் வறட்சி நிலைமை காணப்படுகிறது. மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளதாகவும், வனப்பகுதியில் வறட்சியால் காட்டுத் தீ பரவும் அபாய சூழல் தவிர்க்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 3 முதல் 5 மணி நேரம் மின்சாரம் கிடைக்கவில்லை. மின் பாதிப்புகளை தவிர்க்க மின்வாரியத்தனர் முன்கூட்டியே மின்தடை செய்து விட்டதாக தெரியவந்தது. ராமநாதபுரம் சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் ஒயர்கள் மீது மரங்கள் சாய்ந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
