கோவை தெற்கு தொகுதிக்கு கூடுதலாக 11 பறக்கும் படை…!
கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்குவதாக தொடர்ந்து புகார் குவிந்து வருகிறது .
அதிலும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தனது கரூர் ஆட்களை கோவையில் களமிறக்கி பண பட்டுவாடா செய்வதாக அதிமுகவினர் வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளனர். கோவையில் தெற்கு தொகுதியில் மட்டும் ஒரு ஓட்டுக்கு ஐந்தாயிரம் ரூபாய் என கட்டு கட்டாக பணத்தை வாரி இறைப்பதாக தேர்தல் பிரிவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் மட்டும் ஒன்பது பறக்கும் படை இருந்தது. நேற்று முதல் கூடுதலாக 11 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டது. மொத்தம் 20 பறக்கும் படை இந்த தொகுதியில் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்த போதிலும் பணம் பட்டுவாடா வெகுவாக முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல் கோவை சிங்காநல்லூர் சூலூர் கவுண்டம்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தலா 3 பறக்கும் படைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்ட அளவில் 23 பறக்கும் படைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பறக்கும் படைகள் வீதி வீதியாக ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு கூப்பன்கள் தருகிறார்களா என கண்டறிய பிரத்தியேகமாக களம் இறக்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது மற்ற தொகுதிகளை விட மற்ற மாவட்டங்களை விட மிக அதிகமாக இருப்பதாக தேர்தல் கமிஷனுக்கும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
