கோவையில் நினைவுகளை சுமக்கும் மரங்கள்…!

கோவை நேரு ஸ்டேடியம் அருகே கோவை மாநகராட்சி மூத்த குடிமக்கள் நினைவு பூங்கா அமைந்துள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் இந்த பூங்கா முட்புதர் காடாக இருந்தது. அப்போது நேரு ஸ்டேடியம், வ.உ.சி பூங்கா, வ.உ.சி மைதானம், பஸ் ஸ்டாண்ட் கிடையாது. பனை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தது. இந்த பகுதிக்கு அந்த காலத்தில் ‘பனங்காட்டுபுதூர்’ என்ற பெயர் இருந்தது. இந்த காட்டில் சில நிழல் தரும் மரங்கள் இருந்தன. வழி போக்கர் சிலர் இங்கே தங்கி ஒய்வெடுத்தார்கள், மான், மயில், நரி, செந்நாய்கள், முயல்கள் அதிகமாக காணப்பட்டது.

1960ம் ஆண்டிற்கு பின் பனங்காட்டுபுதூர் சுருங்கி காட்டுப்புதூராகியது. பின்னர் ‘காட்டூராக’ மாறியது. பனங்காடுகள் அழிக்கப்பட்டு ஆங்காங்கே குடியிருப்புகள் உருவானது. ஆனால் காட்டூரின் ஒரு பகுதியில் ஆங்காங்கே மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. இந்த மரங்களை நகரசபை நிர்வாகம் அழிக்கவில்லை. துப்புரவு தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் பகுதியாக மாற்றியது. இந்த பகுதி கடந்த 1996ம் ஆண்டில் மாநகராட்சி நினைவு பூங்கா உருவானது. அப்போது மாநகராட்சி கமிஷனராக இருந்த சந்திரமவுலி, இங்கே நினைவு மரக்கன்றுகளை நட முடிவு செய்தார். தன் தந்தை சுப்ரமணியம் நினைவாக மரக்கன்றை நட்டார். அந்த மரக்கன்று இன்று மரமாக உயர்ந்து வளர்ந்து விட்டது.

இதேபோல் கோவையில் பல முக்கிய பிரமுகர்கள் மரக்கன்று நட்டார்கள், தொழிலதிபர்கள் ஜி.ஆர்.டி. ஜி.கே.தேவராஜ் உட்பட பலரின் நினைவாக மரங்கள் காட்சி தருகின்றன. கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 91 குழந்தைகள் பலியானதின் நினைவாக 26-07-2009ம் ஆண்டில் 9 மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னாள் மேயர்கள் கோபாலகிருஷ்ணன், மலரவன், வெங்கடாசலம் ஆகியோர் மரக்கன்று நட்டுள்ளனர். இறந்தவர்கள் மட்டுமல்ல உயிரோடு இருக்கும் 14 பேர் தங்கள் நினைவாக மரக்கன்று நட்டுள்ளனர். இங்கே ஒரு மரக்கன்று நட மாநகராட்சிக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். கட்டணம் மூலமாக கிடைத்த ரூபாய் பூங்கா பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டில் இங்கே மூத்த குடிமக்கள் நினைவு பூங்கா உருவாக்கப்பட்டது. தமிழக மாநகராட்சியில் கோவையில் மட்டுமே மூத்த குடிமக்களுக்கான நினைவு பூங்கா செயல்படுகிறது. இங்கே மூத்த குடிமக்களுக்காக தனி நடைபயிற்சி பாதை, மரக்குடில் நாற்காலி அமைக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பூங்கா திறந்திருக்கும். முன்னாள் இளைஞர்கள் சிலர் இங்கேயுள்ள புல்வெளியில் விளையாடி மகிழ்கின்றனர். இங்கேயுள்ள மரங்களையும் செடிகளையும், நீரூற்றுகளையும் பராமரிப்பதும் முதியோர்களே. தினக்கூலி அடிப்படையில் இந்த பூங்காவில் 5 முதியவர்கள் பணியாற்றுகின்றனர். தினமும் 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் இந்த பூங்காவில் தினமும் கூடுகிறார்கள், கடந்த கால சம்பவங்களை பேசி மகிழ்கின்றனர். சிலர் பாடல்களை பாடி அசத்துகிறார்கள்.

| பூங்காவில் வலம் வந்த முதியவர்கள் கூறுகையில், “நவீன யுகத்தில் அனைத்து அடையாளங்களை நாங்கள் இழந்து விட்டோம். வேகம், தொழில் நுட்ப முன்னேற்றங்களை தவிர்த்து ஒய்வாக இருக்க இந்த பூங்கா உதவியாக இருக்கிறது. இந்த பூங்கா நாள் முழுவதும் திறந்து வைக்க கோரிக்கை விடுத்திருக்கிறோம். ” என்றனர். கடைசியாக கடந்த 2010ம் ஆண்டில் அப்போதைய மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா மரக்கன்று நட்டார். அதற்கு பிறகு யாரும் மரக்கன்று நடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *