கோவை ரயிலை கவிழ்க்க முயற்சி… ஏணி திருடர்கள் 2 பேர் கைது

திருவனந்தபுரத்தில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு செல்லும் அஹில்யா நகரி எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 10ம் தேதி கோவையை கடந்து சென்று கொண்டு இருந்தது.

இந்த ரயில் ரத்தினபுரி மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் சென்றபோது அங்கு தண்டவாளத்தின் குறுக்கே அலுமினியத்தினால் ஆன ஏணி வைக்கப்பட்டு இருந்தது. இதனை பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ரயிலை நிறுத்த முயற்சி செய்தார்.

ஆனால், அதற்குள் அந்த ரயில் ஏணி மீது ஏறியது. இதில், அந்த ஏணி துண்டு துண்டாக உடைந்தது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக இன்ஜின் டிரைவர் கோவை ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் அங்கு தண்டவாளத்தின் குறுக்கே வைக்கப்பட்டு இருந்த ஏணியை அகற்றினர். இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, 2 பேர் அந்தப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், அந்த இரண்டு பேரும் கோவை வீரகேரளத்தை சேர்ந்த நாகராஜ் (35), சாஸ்திரி நகரை சேர்ந்த கந்தசாமி (45) என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,”கைதான இருவரும் தண்டவாளத்தின் அருகே கிடக்கும் மதுபாட்டில்கள் மற்றும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தனர். அப்போது, ஒரு பழைய அலுமினிய ஏணியை பழைய இரும்பு கடைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முயன்றனர்.

ஏணியை துண்டு துண்டாக உடைத்து எடுத்து வரும்படி கடைக்காரர் கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும் அந்த ஏணியை உடைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. உடனே அதை உடைக்க தண்டவாளத்தின் குறுக்கே வைத்து உள்ளனர். ஆனால், ரயில் இன்ஜின் டிரைவர் அந்த ஏணியை பார்த்ததும், மெதுவாக ரயில் இயக்கியதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *