கோவையில் தென்மேற்கு பருவமழை பாதிப்பை தடுக்க ஆலோசனை…

கோவை கலெக்டர் பவன்குமார் தலைமையில் தென்மேற்கு பருவமழை குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடத்தப்பட்டது.

இதில், தென்மேற்கு பருவமழை காலத்தினை முன்னிட்டு அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து முழு தயார் நிலையில் இருக்க வேண்டும். கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் தாலூகா அலுவலகங்களில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். பேரிடர் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

பொதுமக்களிடமிருந்து 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம் பெறப்படும் தகவல்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பவானி, நொய்யல், ஆழியாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வெள்ளப்பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

பொதுப்பணித்துறையினர் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் நீர்வழித்தடங்களில் உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி, மழைநீர் சீராக வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பலவீனமான கரைப்பகுதிகள் மற்றும் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை தொடர்ந்து கண்காணித்து தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்களை முன்கூட்டியே சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும். மழைநீர் தேக்கம் ஏற்படாத வகையில் துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.பள்ளி வளாகங்களில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள், ஆபத்தான மரக்கிளைகள் மற்றும் மின்கம்பிகள் குறித்து ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

சுகாதாரத்துறையினர் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை வசதிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், ஜெனரேட்டர்கள், அவசர மருந்துகள் மற்றும் குடிநீர் வசதிகள் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் பரவும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்த தேவையான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தினர் மழைக்காலங்களில் மின்விநியோகம் தடைப்படாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையினர் மீட்பு உபகரணங்கள், படகுகள் மற்றும் அவசர மீட்புக்குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

வெள்ளப்பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் பயிர்சேதங்கள் தொடர்பாக உடனடி கணக்கெடுப்பு மேற்கொண்டு விவசாயிகளுக்கு அரசின் நிவாரண உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அனைத்து துறை அலுவலர்களும் தங்களது துறைகளின் அவசரகால செயல் திட்டங்களை புதுப்பித்து முழு தயார்நிலையுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *