கோவையில் 4513 டன் உரம் இருப்பு…
இது குறித்து கோவை வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கோடை பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா உர வகை 3,176 மெட்ரிக் டன், டிஎபி உர வகை 1,458 மெட்ரிக் டன், பொட்டாஷ் உர வகை 2,933 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் உர வகை 1,342 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உர வகை 4,513 மெட்ரிக் டன், தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் மண் ஆய்வு செய்து அதற்கு ஏற்ப உரங்களை பயன்படுத்தியும் அல்லது தமிழ் மண்வள செயலியில் உள்ள பரிந்துரைக்கு ஏற்ப உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். உர விற்பனையாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்து வகை உரங்களையும், குறிப்பாக யூரியா மற்றும் டிஏபி உரங்களை விவசாயிகளின் சாகுபடி பரப்பு மற்றும் பயிரின் தேவைக்கு தகுந்தாற் போல அவர்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து விநியோகம் செய்ய வேண்டும்.
விற்பனையாளர்கள் உர விற்பனை மேற்கொள்ளும் போது மிக கவனமாக பட்டியலிட்டு, முகவரியுடன் விவசாயின் தொலைப்பேசி எண்ணுடன் விவசாயி கையொப்பம் பெற்று விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். நானோ யூரியா, நானோ டிஏபி, வேளாண்மை விரிவாக்க மையத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து வகையான உயிர் உரங்கள், பயிருக்கு ஏற்ப நுண்ணூட்ட சத்து உரங்களை பயன்படுத்துவதால் பயிருக்கு வழங்கப்படும் உரம் அளவு குறைத்து, மண்ணின் வளம் அதிகரித்து உர செலவு குறைத்து அதிக மகசூல் பெறலாம்.
யூரியா கடத்தல், பதுக்கல் மற்றும் முறையற்ற தன்மையில் பட்டியலிடுதல் போன்ற விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக உர விற்பனையாளர்கள் மீது உர கட்டுப்பாடு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உர விற்பனை நிலையத்தின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
