கோவை மாவட்டத்தில் 69 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு…
தமிழ்நாட்டில் வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருந்து 500மீட்டர் வரையுள்ள 717 டாஸ்மாக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூட தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கோவை மண்டலத்தை பொறுத்தவரை கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 851 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகள் அதிகளவில் மூடப்பட இருக்கிறது.
காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலைய பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பு காட்டிய இடங்களில் செயல்பட்ட கடைகள், வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
கோவை மாவட்டத்தில் வடக்கில் 156 கடைகள், தெற்கில் 128 கடைகள் என மொத்தம் 284 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதில், வடக்கில் 48 கடைகள், தெற்கில் 21 கடைகள் என மொத்தம் 69 டாஸ்மாக் கடைகள் தமிழக அரசின் உத்தரவுபடி வரும் 15 நாட்களுக்குள் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதில், உடனடி நடவடிக்கையாக 1557, 1603, 1846 மற்றும் 1662 என்ற எண்கள் கொண்ட 4 டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்பட்டது. இதில், சிங்காநல்லூர் பஸ் நிலையம் எதிர்ப்புறம் உள்ள டாஸ்மாக் கடையும் அடங்கும். தவிர, நீலகிரி மாவட்டத்தில் 27 டாஸ்மாக் கடைகள் மூட இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
இந்நிலையில், மூடப்பட உள்ள டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடை ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்க வேண்டும் என முதல்வருக்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், கடந்த 2023-ல் திமுக ஆட்சியின் போது தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகே செயல்பட்டு வந்த 500 மதுக்கடைகள் தமிழக அரசால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில், கோவை மண்டலத்தை பொறுத்தவரை கோவை தெற்கு, வடக்கில் தலா 10 கடைகள் என மொத்தம் 20 கடைகளும், திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் தலா 24 கடைகளும், நீலகிரி மாவட்டத்தில் 3 கடைகளும், கரூரில் 7 கடைகளும் என மொத்தம் 78 கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
