கோவையில் இளம்பெண்ணுடன் பழகிய வாலிபரை கடத்தி தாக்குதல்

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள எல்.ஜி.பி நகர் புதூர் வீதியை சேர்ந்தவர் ரித்தீஸ்வரன் (19).

இவர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே மாலில் சின்ன வேடம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண் வேலை செய்து வந்தார். அந்த இளம்பெண்ணுடன், ரித்தீஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரித்தீஸ்வரன் அந்த இளம்பெண்ணிடம் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பெற்றதாக தெரிகிறது.

அதை திருப்பிக் கொடுப்பதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 12ம் தேதி அந்த இளம்பெண் ரூ.5,500 வேண்டும் என ரித்தீஸ்வரனிடம் கேட்டு உள்ளார். ரித்தீஸ்வரனும் அந்த பணத்தை தருவதாக கூறி எல்.ஜி. பி., நகரில் உள்ள ஒரு பேக்கரி அருகே வரும் படி அந்த கூறியுள்ளார்.

இதையடுத்து பேக்கரி அருகே இருவரும் சந்தித்தனர். ரித்தீஸ்வரன் அந்த பணத்தை கொடுத்துவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த இளம்பெண் தன்னை சின்னவேடம்பட்டி அருகே இறக்கி விடும்படி கேட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ரித்தீஸ்வரன், அந்த இளம்பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு சென்றார்.

சிறிது தூரத்தில் ரித்தீஸ்வரனுக்கு ஏற்கனவே அறிமுகமான வடவள்ளியை சேர்ந்த சுதர்சன் (20), இடையர்பாளையத்தை சேர்ந்த சத்தி (21), சின்னவேடம்பட்டியை சேர்ந்த விக்ரம் (20) ஆகியோர் ரித்தீஸ்வரனின் பைக்கை நிறுத்தினர். அவர்கள் 3 பேரும், இளம்பெண்ணுடன் சேர்ந்து ரித்தீஸ்வரனிடம் எதற்காக அந்த இளம்பெண்ணுடன் எடுத்த போட்டோக்களை எங்களுக்கு அனுப்பினாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் ரித்தீஸ்வரனின் செல்போனை பிடுங்கி தங்களுடன் வரும்படி கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரித்தீஸ்வரனை சின்னவேடம்பட்டி ஏரி மதகு அருகே அழைத்துச் சென்றனர்.

அங்கு வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து ரித்தீஸ்வரனை சரமாறியாக தாக்கி, அந்த இளம்பெண்ணுடன் பழகக் கூடாது என மிரட்டி தப்பி சென்றனர். பலத்த காயம் அடைந்த ரித்தீஸ்வரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ரித்தீஸ்வரன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சுதர்சன், சத்தி, விக்ரம் மற்றும் இளம்பெண் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *