கோயம்புத்தூர் பைபாஸ் ரோடு… NOC தர ரயில்வே, கெயில், ஆயில் கம்பெனிகள் தாமதம்…!

கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு எல் அண்ட் டி ரோடு என்ற பெயரில் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இந்த பைபாஸ் இனி கோயம்புத்தூர் பைபாஸ் என்ற பெயரில் சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்படவுள்ளது. இதற்கான திட்டங்கள் தயார் செய்த நிலையில், ஒன்றிய அரசின் துறைகள் தடையின்மை சான்று, அனுமதி வழங்குவதில் முட்டுகட்டை போட்டு உட்கார்ந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்தினர் நடத்திய பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை. கடிதங்களை கிடப்பில் போட்டு ஒன்றிய அரசின் துறைகள் மவுனமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் கெயில் நிறுவனத்தின் பைப் லைன் இருக்கிறது. இது தவிர இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் பிளான்ட் பைப் லைன் அமைந்துள்ளது.

இந்த நிறுவனங்களின் பைப் லைன் மாற்ற பைபாஸ் ரோடு விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்க கடிதம் தரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் கடிதம் தாமதமாகி வருகிறது. இதேபோல் இருகூர், செட்டிபாளையம் பகுதியில் உள்ள ரயில்வே பகுதியில் பணி நடத்த அனுமதி வழங்க கடந்த 13-01 2026ம் தேடு அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. 23-03-2026ம் தேதி இரு தரப்பு ஆய்வு நடத்தப்பட்டது.

ஆனால் 3 மாதமாக ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் வழங்காமல் அனுமதி உத்தரவை கிடப்பில் போட்டதாக தெரியவந்துள்ளது. பில்லூர், சிறுவாணி குடிநீர் வாரியமும் குடிநீர் குழாய்களை மாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கவில்லை. மதுக்கரை நகராட்சி, பள்ளபாளையம், சூலூர் பஞ்சாயத்துகளிலும் பணி நடத்த தடையின்மை சான்று கிடைக்கவில்லை.

திட்ட பணிகளுக்கு மரங்களை வெட்ட பசுமை இயக்கத்தின் அனுமதி மறுக்கப்பட்டது. எவ்வித அனுமதியும் கிடைக்காத நிலையில் கோயம்புத்தூர் பைபாஸ் திட்டம் முடங்கி போகும் அவலத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்த அனுமதி கிடைத்த பின்னரே கோவை கட்டமைப்பின் வளர்ச்சி தொடர்பாக அடுத்த ஆலோசனை செய்ய முடியும். இப்போதைக்கு கோயம்புத்தூர் பைபாஸ் ரோட்டிற்கு பெரும் சவால் காத்திருப்பதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *