நீட் பயத்தில் மாணவி தற்கொலை…

கோவை குனியமுத்தூர் பாரூக் நகரை சேர்ந்தவர் செந்தில் பிரபு (47). கோவை சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளராகவும், மா.கம்யூனிஸ்ட் மேற்கு நகர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

இவர் மகள் அனுகீர்த்தனா (19). எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்விற்காக பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார். அனுகீர்த்தனா 2 முறை நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த முறை எழுதிய நீட் தேர்வும், வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அனுகீர்த்தனா மனவேதனை அடைந்தார் .

ஆனாலும் அடுத்த நீட் தேர்விற்காக அவர் தயாராகி கொண்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த இரணடு நாட்களாக அனுகீர்த்தனா நீட் தேர்வு குறித்த பயத்திலும் கடுமையான மன அழுத்தத்திலும் இருந்து வந்ததாக தெரிகிறது. இன்று அதிகாலை வீட்டில் இருந்த அவர் நீட் தேர்வு குறித்து நினைத்து பயத்துடன் இருந்துள்ளார்.

வீட்டில் இருந்த தலைவலி தைலத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அனுகீர்த்தனாவை மீட்டு உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் மட்டுமல்ல தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வை கண்டித்து மீண்டும் பல்வேறு கட்சினர் அமைப்பினர் போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.

அனுகீர்த்தனா தற்கொலை செய்ய முன் தனது சித்தப்பா மற்றும் நெருங்கிய உறவினர்களின் வாட்ஸ்-அப் எண்களுக்கு நீண்ட உருக்கமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், நான் நீட் தேர்வு எழுதி விட்டு மருத்துவக் கல்லூரியில் சேரக் காத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் தேர்வை ரத்து செய்து விட்டார்கள். இப்போது மீண்டும் தேர்வு எழுத பயமாக இருக்கிறது. அப்பா எனக்காக நிறைய செலவு செய்து விட்டார். இனிமேல் குடும்பத்தினர் முகத்தில் நான் எப்படி விழிப்பேன் என்று தெரியவில்லை என தெரிவித்து இருந்தார். இந்த மெசேஜ் உறவினர்கள் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *