சிங்கப்பெண் சிறப்பு படை சீக்கிரம் வருமா… கல்லூரி ஏரியாக்களில் கஞ்சா குரூப் ரவுண்ட்ஸ்
கோவை நகரில் அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு பகுதியில் அதிகளவு கல்லூரிகள் இருக்கிறது.
இந்த கல்லூரிகளின் வேலை நேரம் மாலை சுமார் 4 மணிக்கு முடிவடைகிறது. அந்த நேரத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் பஸ் ஸ்டாப், பொது இடங்களுக்கு வந்து செல்கிறார்கள். அப்போது கஞ்சா, சிந்தடிக் டிரக் போதை கும்பல் ஜாலியாக வலம் வருவதாக புகார் எழுந்துள்ளது.
படிப்பை முடித்த -சீனியர்கள் சிலரும் கல்லூரி அருகே ரோட்டில் மாணவிகளை நோட்டம் விட்டு வலம் வந்து டார்ச்சர் குருவதாக தெரியவந்துள்ளது. பீளமேடு, சிட்ரா, காளப்பட்டி, நவ இந்தியா, ஹோப்ஸ், சரவணம்பட்டி, பாரதிபார்க் ரோடு, கோவைப்புதூர் பிரிவு பகுதிகளில் போதை கும்பல் சொகுசு பைக்குகளில் சுற்றி சுற்றி வருகிறார்கள். இவர்களை போலீசார் கண்டுகொள்வதில்லை.
மாணவர்களை போல் இருப்பதால் போலீசாரும் பெயரளவிற்கு கூட விசாரிப்பதில்லை. ஹாஸ்டல் செல்லும் மாணவிகளை பின் தொடர்வது, சினிமாவுக்கு போகலாம் வா என அழைத்து தொந்தரவு செய்வது தொடர்வதாக தெரிகிறது. இவற்றை எல்லாமல் மாணவிகள் எதிர்கால பிரச்னையை கருத்தில் கொண்டு வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள்.
குறிப்பாக வேறு மாவட்டங்களில் இருந்து கோவை வந்து வெளி ஹாஸ்டலில் தங்கி இருப்பவர்கள் பயத்தில் தவிக்கிறார்கள். போலீசார் கல்லூரி அருகேயுள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் வாகனங்களை நிறுத்தி அவ்வப்போது ஹெல்மெட், டிரிப்ள்ஸ் செக்கிங் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். மாணவிகளை அச்சுறுத்தும் நபர்களை மடக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை.
மாநகரில் இரண்டு சிங்கப்பெண் சிறப்பு படை உள்ளது. இந்த படையினர் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் நகரின் அனைத்து ஏரியாக்களுக்கும் சென்று கண்காணிப்பது சிரமம் தான், ஆனால் தினமும் ஒரு பிரதான ரோடு என எட்டிபார்த்து விசாரிக்க முன் வரவேண்டும், அனைத்து மகளிர் போலீசாரும் கல்லூரி விடும் நேரங்களில் சோதனை செய்ய வேண்டும். மாணவிகள் பாதுகாப்பாக
ஹால்டல்களுக்கு செல்ல முடிகிறதா, பொது இடங்களில் பாதுகாப்பான சூழல் இருக்கிறதா என ஆய்வு செய்யவேண்டும். கல்லூரி மாணவர்களை மிரட்டி சீனியர்கள் சிலர் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளில் புகுந்து தொந்தரவு தருவதாக தெரிகிறது. மாணவர்களின் அறையை ஆக்கிரமித்து செல்ல மறுப்பதாக தெரிகிறது.
இந்த விவகாரத்தை போலீசார் கண்டுகொள்வதில்லையாம். இதுபோன்ற அடாவடியை தடுக்க நகர போலீசார் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
