யானை, சிறுத்தை தாண்டி சிறுவாணி அணைக்கு போக சிக்கல்…!

கோவை சிறுவாணிக்கு கோவை குற்றாலம் வனப்பகுதியிலிருந்து, சாடிவயல், சிங்கப்பதி, வெள்ளப்பதி, சுத்திகரிப்பு நிலையம், மயிலோன் பங்களா வழியாக 15 கி.மீ தூரம் செல்லவேண்டும்.

12 கி.மீ தூரத்திற்கு வனப்பகுதி வழியாக சென்றால் சிறுவாணிக்கு செல்ல முடியும். கடந்த 10 ஆண்டாக வனப்பகுதி ரோட்டில் மண் சரிவினால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சிறுவாணி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அபாய வளைவுகள், பள்ளங்கள் நிறைந்த வனப்பகுதி ரோட்டில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கோவை குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் சிறுவாணி அணைப்பகுதிக்கும், மாநில எல்லை வனப்பகுதிக்கும் சென்று வர முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

அணை ரோட்டை சீரமைத்து, நிலச்சரிவு ஏற்படாமல் தடுக்கவேண்டும். மலைச்சரிவில் இருந்து பாறைகள் உருண்டு வந்து ரோட்டை சேதப்படுத்தாமல் தடுக்க கருங்கல் தடுப்பு சுவர் அமைக்கவேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர். ரோடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுபாட்டில் இருப்பதால் அந்த துறையினர் பணிகளை நடத்த வேண்டியிருக்கிறது.

ஆனால் ரோடு பணிக்காக இதுவரை நிதி எதுவும் ஒதுக்கவில்லை. இதனால் பணிகள் நடக்கவில்லை. தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினர் அணைக்கு செல்ல வேண்டும் என்றால் பாலக்காடு, மண்ணார்காடு வழியாக சென்று வரவேண்டி நிலையில் இருக்கின்றனர்.

அணையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடத்தவேண்டியுள்ளது. குடிநீர் வாரிய அதிகாரிகள் அணையின் நிலவரத்தை நேரில் பார்க்க அடிக்கடி செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். சமீப காலமாக -அணைக்கு செல்ல பிரத்யேகமான ஜீப் ஒன்றை பயன்படுத்தி மலைப்பாதையில் சென்று வருகின்றனர்.

கல், பாறை மீது ஏறி அதிக சிரமத்தில் இந்த வாகனத்தில் மேடு பள்ளமான, மண் சரிவு மலைப்பாதையில் குடிநீர் வாரியத்தினர் சென்று வருவதாக தெரிகிறது.

உதவிக்கு துப்பாக்கியுடன் வனத்துறையினரையும் அழைத்து செல்கிறார்கள். சில நேரங்களில் யானை, சிறுத்தை, செந்நாய் நடமாட்டத்தை சமாளித்து சென்று வர வேண்டியுள்ளது. பாதைகளை சரி செய்ய எப்போது நிதி வரும் என தெரியாது என வனத்துறையினர், குடிநீர் வாரியத்தினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *