தேர்தல் பணிகளை ஏற்க மறுக்கும் அரசு அலுவலர்கள், சிபாரி செய்யும் உயர் அதிகாரிகள்…!

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாவட்ட அளவில் 3571 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. ஒரு ஓட்டு சாவடிக்கு 5 பேர் பணியாற்ற வேண்டும். மாவட்ட அளவில் ஓட்டு சாவடிகளில் மட்டும் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இது தவிர தேர்தல் பணியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர்.

தேர்தல் பணி அலுவலர்களுக்கு பணி உத்தரவு விரைவில் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் அலுவலர் சிலர் தாங்கள் தேர்தல் பணி செய்ய முடியாது. அதில் இருந்து விலக்கு தர வேண்டும் என மருத்துவ ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது, சர்க்கரை நோய் உள்ளது, நடக்க முடியவில்லை நீண்ட காலம் மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக பல்வேறு காரணங்களை கூறி தேர்தல் பணி விலக்கு கேட்டு விண்ணப்பங்கள் குவித்து வருகின்றனர்.

இதுவரை 500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டிருக்கிறது. சிலருக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. சிலர் நல்ல உடல் ஆரோககியத்துடன் இருப்பதால் பணி விலக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் அலுவலர்கள் சிலர் உயர் அதிகாரிகள் உதவியுடன் பணியில் இருந்து விலக்கு கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். உயர் அதிகாரிகள் தங்கள் பிரிவில் உள்ள சில அலுவலர்களுக்கு பணியில் இருந்து விலக்கு கேட்டு சிபாரிசு செய்வதால் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தவிப்படைந்துள்ளனர்.

ஓரிரு நாள் தேர்தல் பணி செய்வதற்கு அரசு அலுவலர்கள் அச்சப்படும் சூழல் ஏன் இருக்கிறது. தினமும் அவர்களால் எப்படி அரசு அலுவலகங்களில் பணி செய்ய முடிகிறது. அலுவலகப் பணி செய்பவர்கள் தேர்தல் பணியை செய்ய முடியாமல் இருக்க காரணம் என்ன என தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு இருக்கிறது.

தேர்தல் பணி செய்தால் டென்ஷன் ஏற்படும். தங்களது அலுவலகம் போல் ஜாலியாக இருக்க முடியாது, தற்காலிக பணியாளர்களை வைத்து வேலை செய்ய முடியாது. தாங்களே பொறுப்பை ஏற்று வேலை செய்ய வேண்டி இருக்கும். எனவே அலுவலர்கள் சிலர் பணிகளை செய்ய முடியாமல் உடல் நலத்தை காரணம் காட்டி விலக்கு கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் உடனடியாக தேர்தல் பணி செய்ய வேண்டும். பணிகளில் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் பிரிவு எச்சரித்துள்ளது. மேலும் சிபாரிசு செய்யும். உயர் அதிகாரிகள் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது.

சில அலுவலர்கள் உரிய பணி திறன் இன்றி இருப்பதாக தெரிகிறது, எந்த வேலையும் தெரியாத நிலையில், தேர்தல் பணி செய்தால் தவறு செய்து வசமாக மாட்டி கொள்வோம் என்ற பயத்தில் இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்கள் பணி செய்ய தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

பணி திறன் குறைந்த அலுவலர்களை ரிசர்வ் நிலையில் வைத்திருக்க திட்டமிட்டிருக்கிறது. இருந்த போதிலும் பல ஆயிரம் பேர் தங்களை ரிசர்வ் அலுவலர்களாக மாற்ற கோரிக்கை விடுத்து சிக்கலை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே அலுவலர்கள் உரிய பணி ஒதுக்கீட்டின் படி பணி செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் கடுமையாக எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *