டாஸ்மாக்கில் மட்டமான சரக்கு… எப்எல் 2 பாரில் பேமஸ் பிராண்ட்…

தமிழகத்தில் 4048 டாஸ்மாக் கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எப்எல்2 எப்எல்3 மற்றும் பல்வேறு வகையான உரிமம் பெற்ற தனியார் பார்கள் செயல்படுகிறது.

தினமும் சுமார் 1 கோடி பேர் மதுபானம் வாங்கி பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதமாகியும் இதுவரை டாஸ்மாக் நிர்வாகத்தில் தவறுகளை தடுக்க கூடிய, நிர்வாக ரீதியான மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. டாஸ்மாக் கடைகளில் இட நெருக்கடி, பாட்டில் வைப்பதில் பிரச்னை, காலாவதியான மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கிறது.

பார்களில் வாகனங்கள் நிறுத்த இடமில்லை, கழிவறை கிடையாது, போதுமான கூரை அமைக்கப்படவில்லை, குடிக்கும் இடத்தில் காலி பாட்டில்களும் குப்பை குவிக்கப்படுகிறது, கெட்டு போன உணவுகள், அசுத்தமான துர்நாற்றமான சூழலில் பார்கள் செயல்படுகிறது, சுகாதார கேடாக உணவு தயாரிக்கப்படுகிறது. இவற்றை சரி செய்ய எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை.

பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் பெறும் விவகாரம் பூதாகரமான நிலையில் சில கடைகளில் கூடுதலாக 20 ரூபாயும், எப்எல்2 கடைகளில் 30 ரூபாயும் கூடுதலாக வாங்கும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பாட்டில், காலி பாட்டில் சேகரிப்பு, குடோன்களில் இருந்து கடைகளுக்கு சப்ளையாகும் மதுபாட்டில் பெட்டிகளுக்கு லஞ்சம் வாங்குவது முன்பை விட அதிகமாகவே இருக்கிறது.

மதுபான கொள்முதல், சப்ளையிலும் மோசடி அதிகமாகி விட்டது. குறைந்த விலை, நடுத்தர விலை, உயர் விலை என 3 வகைகளில் 320க்கும் மேற்பட்ட பிராண்ட மதுபானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டிஸ்டில்லரீஸ் நிறுவனங்களுடன் அதிகாரிகள் டீல் பேசி குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்கள் மட்டும் டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் நிலைமை இருக்கிறது.

இன்டென்ட் போட்டு அனைத்து பிராண்ட் மதுபானங்களை வழங்க டாஸ்மாக் நிர்வாகம் முன் வரவில்லை. அலுவலக ரீதியான நிர்வாக ரீதியான சீர்திருத்த பணிகளும் நடக்கவில்லை. டாஸ்மாக் கலால் என இரு பிரிவாக நிர்வாகம் இருக்கிறது இதிலும் ஏகப்பட்ட முரண்பாடுகள் பிரச்னைகள் இருக்கிறது. நடவடிக்கை எடுக்க தமிழக அரசு கால அவகாசம் வேண்டும் என கேட்டு வருகிறது.

ஆனால் அடிப்படை சுகாதார வசதிகள் குறிப்பாக டாஸ்மாக் பார் கடைகளை சுத்தம் செய்ய கூட இந்த அரசு முனைப்பு காட்டாமல் இருப்பதால் குடி பிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். மதுவிலக்கு அமலாக்க துறை அமைச்சர் வசிக்கும் கோவையில் மிக மோசமான சூழ்நிலை இருக்கிறது.

அமைச்சர் கடை பார்களை ஆய்வு செய்து பிரச்னைகளை களையாமல் கற்று கொண்டிருப்பதாக கூறி காலம் கடத்துவதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், “டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்திற்கு போதிய ஊழியர்களை நியமிக்கவில்லை. கடைகளில் கூடுதல் இட வசதி ஏற்படுத்தவில்லை. அனைத்து மது பாட்டில்களிலும் 100 சதவீதம் இபிசி ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பவில்லை. சில்லரை தட்டுப்பாடு உள்ளது. இதனை போக்கிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிக வியாபாரம் ஆகக்கூடிய நேரத்தில் கையகடக்க கருவி இயங்குவதில்லை.

காலி பாட்டில் திரும்ப பெரும் திட்டப்பணியை அவுட்சோர்சிங் மூலம் அமுல்படுத்த வேண்டும். மதுபாட்டில் கொள்முதல் செட்டப்பில் மாற்றம் தேவை. தனியார் பார்களுக்கு அனைத்து பிராண்ட் மதுபானங்களும் சப்ளையாகிறது. மதுபாட்டில்களுக்கு எங்களால் பில் வழங்க முடியாத நிலைமை இருக்கிறது. பில்லிங் கவுண்டர் இங்கே கிடையாது. பார்களில் உணவு விலையை நிர்ணயம் செய்யவில்லை, ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *