கோவையில் செம்மண் முறைகேடு; ரூ50 கோடி வசூல் தாமதம்…

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, வெள்ளிமலை பட்டினம், போளுவாம்பட்டி, தென்கரை, சென்னனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அனுமதி இன்றி செம்மண் தோண்டி எடுக்கப்பட்டதாக தெரியவந்தது.

இது தொடர்பாக வருவாய்துறை மற்றும் கனிமவளத்துறையினர் சோதனை நடத்தினர். ட்ரோன் சர்வே செய்யப்பட்டது. இதில் 280 குழிகளில் 3.5 மீட்டர் ஆழம் வரை செம்மண் முறைகேடாக தோண்டி எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்தது. சட்ட விரோத செங்கல் சூளைகளுக்காக இந்த செம்மண் லோடு கடத்தப்பட்டு வந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரத்துடன் புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். போலீசிலும் புகார் தரப்பட்டது. 273 நில உரிமையாளர்களுக்கு செம்மண் மோசடி தொடர்பாக அபராதம் விதித்து உத்தரவு வழங்கப்பட்டது.

ஆனால் இந்த அபராத தொகையை செலுத்துவதற்கு நில உரிமையாளர்கள் பெரும்பாலானவர்கள் முன்வரவில்லை. இது தொடர்பாக அவர்கள் மேல் முறையீடு செய்தனர். தங்களது நிலங்களில் முறைகேடாக செம்மண் எடுக்கவில்லை. கனமழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது என சிலர் வருவாய் கோட்டாச்சியரிடம் தகவல் தெரிவித்தனர்.

மேலும் சிலர் நாங்கள் நிலத்தை வாங்கி போட்டு விட்டு சென்று விட்டோம். வெளியூரில் வசிக்கிறோம் எங்கள் நிலத்தில் யார் மண் எடுத்தார்கள் என தெரியவில்லை எனக்கு கூறியுள்ளனர். தங்களுக்கு முன்பு நிலத்தை வைத்திருந்தவர்கள் செம்மண் தோண்டி எடுத்து விட்டார்கள் எங்களுக்கும் எதற்கும் சம்பந்தமில்லை எனவும் தற்போதைய பட்டாதாரர்கள் சிலர் கூறியுள்ளனர்.

கூட்டு பட்டாக்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டதும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அபராதம் விதிக்கப்பட்ட நபர்கள் அனைவரும் மேல்முறையீடு செய்துள்ளனர். மிக சொற்பமாக சில லட்ச ரூபாய் மட்டுமே அபராத தொகை பெறப்பட்டது. சுமார் 50 கோடி ரூபாய் அபராத தொகை வசூல் பணி முடங்கிப் போய் கிடப்பதாக தெரிகிறது.

மேல்முறையீடு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிய அபராத தொகை வருவாய் வசூலிப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது என கனிம வளத்துறை என தெரிவித்தனர். மேலும் செம்மண் கடத்தல் நடந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் யாராவது அனுமதி இன்றி பட்டா நிலங்களில் செம்மண் எடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *