கோவையில் ஜமாபந்தி; 2 நாளில் 5517 மனுக்கள் குவிந்தது…

கோவை மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 16ம் தேதி துவங்கியது.

மதுக்கரை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் முகாம் நடந்து வருகிறது. வரும் 19ம் தேதி வரை ஜமாபந்தி நடத்தப்படவுள்ளது. மதுக்கரையில் 18 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கோவை வடக்கு தாலுகாவில் வரும் 25ம் தேதி வரையிலும் முகாம் நடக்கவுள்ளது..

வார விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில் அறிவிக்கப்பட்ட நாட்களில் முகாம் நடத்தப்படவுள்ளது. பட்டா மாறுதல், பட்டா பிழை திருத்தம், சப் டிவிசன் செய்தல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவி தொகை, ரேஷன் கார்டு, மகளிர் உரிமை தொகை, நில அளவை தொடர்பாக விண்ணப்ப மனுக்களை வழங்கினர்.

குறிப்பாக இலவச மனை பட்டா கேட்டு பெண்கள் அதிகளவு மனுக்கள் குவித்து வருகிறார்கள். நேற்று மதுக்கரை தாலூகாவில் 278 மனுக்கள், கோவை வடக்கில் 156 மனுக்கள், பொள்ளாச்சியில் 211, மேட்டுப்பாளையத்தில் 442, சூலூரில் 697 மனுக்கள், பேரூரில் 243 மனுக்கள், கிணத்துக்கடவில் 278 கோவை தெற்கில் 162, அன்னூரில் 415, ஆனைமலையில் 277 மனுக்கள் பெறப்பட்டது.

ஒரே நாளில் 3159 மனுக்கள் பெறப்பட்டது. கடந்த 16ம் தேதி 2358 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கடந்த 2 நாளில் 5517 மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் நீண்ட காலமாக கோரிக்கை மனு கொடுத்தவர்கள் திரும்ப வந்து அனைத்து அதிகாரிகளும் இருக்கும் போது மனு அளித்தும் உடனடி தீர்வு கிடைக்கவில்லை.

குறிப்பாக பட்டா மாறுதல் பிரச்னைகளில் கால தாமதம் நீடித்து வருகிறது. பெண்கள் இலவச மனை பட்டா கேட்டு அதிகமாக வருகின்றனர். ஆனால் பட்டா வழங்க இடமின்றி அதிகாரிகள் வழக்கம் போல் பெயரளவிற்கு மனுக்களை வாங்கி குவித்து வருகிறார்கள். கடந்த 2 நாளில் சூலூர் தாலூகாவில் அதிக மனுக்கள் பெறப்பட்டிருக்கிறது.

ஆர்டீஓ மாருதி பிரியா மக்களிடம் மனுக்கள் வாங்கி தீர்வு காண தீவிரம் காட்டி வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து இவர் அதிக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதால் அதிக விண்ணப்பங்கள் பெறப்படுவதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *