கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு ஸ்பெஷல் வார்டு தயார்…!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 15,688 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, 11 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் கடந்த 16-ம் தேதி வரை 16,334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில், சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து, பாதிப்பை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசு மற்றும் அதன் புழுக்களை கண்டறிந்து அழிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

ஊரக மற்றும் மாநகராட்சி பகுதியிலும் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டு 1,325 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 9 மாதங்களில் 1,801 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தவிர, நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, பெரியவர்களுக்கு 14 படுக்கை வசதியுடன் கூடிய ஸ்பெஷல் வார்டு மற்றும் குழந்தைகளுக்கு 14 படுக்கை வசதியுடன் கூடிய வார்டு என மொத்தம் 28 படுக்கை வசதியுடன் கூடிய வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

தற்போது, இந்த டெங்கு வார்டில் 4 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் கடந்த 1ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான 17 நாட்களில் 40 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவர்களில், 34 பேர் பெரியவர்கள், 6 பேர் குழந்தைகள் ஆவர். காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெரியவர்கள், குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

திடீரென 104 டிகிரி வரையிலான அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்கு பின்னால் வலி கடுமையான தசை, எலும்பு மூட்டு வலி, வாந்தி, தோலில் தடிப்புகள், மூச்சுத்திணறல், ஈறுகளில் அல்லது மூக்கில் ரத்தம் வடிதல், மலத்தில் ரத்தம், சோர்வு, கடுமையான வயிற்றுவலி ஆகியவை ஆகும். இந்த பாதிப்புகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

One thought on “கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு ஸ்பெஷல் வார்டு தயார்…!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *