கோவை வெஸ்டன் பைபாஸ் 2 பேக்கேஜில் மாற்றம்…

கோவை மேற்கு பைபாஸ் ரோடு பணி மதுக்கரை மைல்கல் பகுதியில் துவங்கி நரசிம்ம நாயக்கன்பாளையம் வரையில் 32.40 கிமீ தூரத்திற்கு 3 கட்டமாக 4 வழிப்பாதையாக நடக்கிறது. முதல் கட்டமாக 11.8 கி.மீ தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் இந்த பணிகள் முடியும் நிலையில் இருக்கிறது. மைல்கல் முதல் மாதம்பட்டி வரை இந்த பணிகள் நடக்கிறது. ஜனவரி மாதத்தில் இந்த ரோடு பயன்பாட்டிற்கு வரும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அடுத்த கட்டமாக 12.5 கி.மீ தூரத்திற்கு பைபாஸ் ரோட்டின் 2ம் கட்ட பேக்கேஜ் பணிகள் துவக்கப்படவுள்ளது. இதற்காக 99 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக 37.70 எக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக 111 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மேற்கு பைபாஸ் ரோட்டின் அடுத்தடுத்த பணிகள் மாநில நெடுஞ்சாலைத்துறையின் திட்ட பிரிவில் இருந்து மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையகத்திற்கு (டான்சா) மாற்றம் செய்யப்பட்டது. 2ம் கட்ட பணிகள் 11.8 கி.மீ தூரத்திற்கு நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் ரோட்டின் நீளம் சற்று மாற்றப்பட்டு வடிவமைப்பிலும் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. மேலும் எந்த வகைப்பாட்டில் பணிகள் செய்வது என தெரியாத குழப்பமான சூழல் நிலவுகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை 2ம் கட்ட பணிகளுக்கு 368 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்தது. இந்த திட்ட அறிக்கையின் படி பணிகள் நடத்த டான்சா முன் வரவில்லை. மாறாக புதிதாக விரிவான சாத்தியக்கூறு அறிக்கை (டீ எப்ஆர்) தயார் செய்வதற்கான ஆய்வு பணிகளை துவக்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னையில் இருந்து வந்த டான்சா குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் திட்ட வடிவமைப்பு, மேம்பாலங்கள், தரை பாலம், ரோடு சந்திப்பு மேம்பாடு தொடர்பாக ஆய்வு செய்து வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திட்ட மதிப்பீடும் கணிசமாக அதிகரிக்கும் நிலைமை இருக்கிறது. 2ம் கட்ட பைபாஸ் ரோட்டில் சுங்க வரி வசூல் மையம் அமைக்கப்படுவது தொடர்பாகவும் ஆய்வு நடக்கிறது. விரைவில் ஆய்வு முடிந்ததும் 2ம் கட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்படும். திட்ட மதிப்பீட்டில் இப்போதுள்ள தொகையை விட 10 முதல் 20 சதவீதம் கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *