கோவையில் அஞ்சல் முத்திரை பாஸ்போர்ட் விற்பனை…

கோவை கூட்ஷெட் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் விற்பனைக்கு வந்த அஞ்சல் முத்திரை கடவு (பிலா லி பாஸ்போர்ட்) பொதுமக்களிடம் வரவேற்பு இருந்த நிலையில், ஒரே நாளில் விற்றுத்தீர்ந்தது.

தமிழக அஞ்சல் வட்டத்தில் அஞ்சல் முத்திரை கடவு விற்பனை சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் புதுச்சேரி ஆகிய 5 இடங்களில் உள்ள அஞ்சல் முத்திரை பிரிவுகள் வாயிலாக நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.

இந்த முத்திரை கடவில் தமிழகத்தின் 58 முக்கிய இடங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.650 ஆகும்.

இந்த கடவு வெறும் நினைவு பொருள் மட்டுமல்ல. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அவற்றின் சிறப்புகளை அறிந்துகொள்ள உதவும் பயண பதிவேடாகவும் பயன்படுகிறது.

இந்த கடவை வாங்கியவர்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள 58 இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஒவ்வொரு இடத்திலும் தொடர்புடைய தபால் நிலையத்திற்கு சென்று, அந்த இடத்திற்கென வழங்கப்படும்.

சிறப்பு சித்திர அஞ்சல் முத்திரை பதிவை கடவில் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் ஒவ்வொரு இடத்திற்கும் சென்றதற்கான நினைவு பதிவை சேகரிக்க முடியும்.

இளம் தலைமுறையினரிடையே அஞ்சல் முத்திரை சேகரிக்கும் ஆர்வத்தை வளர்ப்பதுடன், தமிழகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் சுற்றுலா தலங்களை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதில், கோவில்கள் கோட்டைகள், கலங்கரை விளக்கங்கள், வனவிலங்கு பகுதிகள், முக்கிய நிறுவனங்கள் மற்றும் பாரம்பரிய சிறப்புமிக்க இடங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த 58 இடங்களின் தேர்வில் இடம் பெற்றுள்ளன.

இதில், கோவை வேளாண் பல்கலைக்கழகம், முதுமலை, கன்னியாகுமரி, கஞ்சிபுரம், திருச்செந்தூர். ராமேஸ்வரம், கொடைக்கானல் ஆகிய இடங்களை உள்ளடக்கி இருப்பதால், சுற்றுலா பயணிகளுக்கும் அஞ்சல் முத்திரை சேகரிப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கோவை கூட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால்நிலையத்தில் நேற்று முன்தினம் அஞ்சல் முத்திரை கடவு விற்பனைக்கு வந்தது. இதனை வாங்க ஏராளமான இளைஞர்கள், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் வந்திருந்தனர்.

இதனால், தலைமை தபால் நிலையத்திற்கு வந்திருந்த சுமார் 300 அஞ்சல் முத்திரை கடவுகள் அனைத்தும் ஒரே நாளில் விற்பனையானது. இதற்கிடையே, நேற்று கடவு வாங்குவதற்காக தபால் நிலையத்திற்கு வந்த. 80 க்கும் மேற்பட்டவர்கள் தங்களது பெயர் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளனர். அடுத்தகட்டமாக கடவுகள் வந்ததும் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும். அதன் பிறகு தபால் நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *