கோவையில் 15272 பேர் குரூப் 2 தேர்வு எழுதினர்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்- 2, முதல்நிலை தேர்வானது (குரூப் 2 மற்றும் 2ஏ) இன்று நடந்தது.
இந்த தேர்வு மாவட்டத்தில் 44 பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள 73 தேர்வு மையங்களில் நடந்தது. இந்த தேர்வினை 20 ஆயிரத்து 980 தேர்வர்கள் எழுக இருந்தனர். இந்த நிலையில், தேர்வினை 15,272 பேர் எழுதினர். 5,708 பேர் எழுதவில்லை. மேலும், தேர்வர்கள் காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கோவை பெரிய கடைவீதியில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்தார். அந்த மாணவி சரியாக 9 மணிக்கு வந்த நிலையில், வாகனத்தை வெளியில் நிறுத்த போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி, அவர் வாகனத்தை வெளியில் நிறுத்திவிட்டு தேர்வு மையத்திற்குள் நுழையும்போது தேர்வு மையத்தை அதிகாரிகள் மூடிவிட்டனர்.
அந்த மாணவி தான் சரியான நேரத்திற்கு வந்தும் தன்னை ஏன் உள்ளே அனுமதிக்கவில்லை என அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டார். ஆனால், அவர்கள் மாணவியை உள்ளே அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதனால், அந்த மாணவி தேர்வு எழுதாமல் மனவருத்தத்துடன் திரும்பி சென்றார்.
