சினிமா படம் எடுப்பதற்காக கோவையில் 16 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி…
சினிமா தயாரிப்புக்காக துப்பாக்கி சுடும் வீராங்கனையிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை சிங்காநல்லூர் நஞ்சப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஸ்வரன் இவரது மகள் அனு பிரபா (30). இவர், தேசிய அளவில் பல்வேறு துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார் தற்போது, குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் ரைபிள் அகாடமியில் இணைச் செயலாளராகவும், தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.
இவரது தாய் ராஜேஸ்வரிக்கு சூலூர் தாலுகா கண்ணம்பாளையம் கிராமத்தில் 20 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை கடந்த 2010-ம் ஆண்டு விஸ்வநாதன் மற்றும் வெற்றிவேல் ஆகியோருக்கு விற்பனை செய்ய கிரைய ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் முழு கிரையப் பத்திரம் முடிக்காததால் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், அனு பிரபாவின் துப்பாக்கி சுடும் பயிற்சி அகாடமியில் பயிலும் மாணவர் ஒருவரின் தாயாரான தனலட்சுமி என்பவர் அனு பிரபாவிடம் அறிமுகமானார். அவர், அனு பிரபாவிடம் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும், அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கண்ணம்பாளையத்தில் உள்ள 20 சென்ட் நிலப்பிரச்னையை சுமூகமாக பேசி முடித்துத் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய அனு பிரபா, கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 2025ம் ஆண்டு டிசம்பர் 30 வரை பல்வேறு தவணைகளாக ரூ. 16 லட்சத்து 444 யை தனலட்சுமியிடம் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தை பெற்றுக் கொண்ட தனலட்சுமி. கூறியபடி நிலப்பிரச்னையை தீர்த்து வைக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பித் தராமலும் இழுத்தடித்து ஏமாற்றி வந்தார்.
பணத்தை திருப்பித் தருமாறு அனு பிரபா தொடர்ந்து வற்புறுத்திய போது, தனலட்சுமி தனியார் வங்கி காசோலைகளை வழங்கியுள்ளார். ஆனால், வங்கிக்கணக்கில் போதிய பணம் இல்லாததால் அந்த காசோலைகள் திரும்பி வந்துள்ளன. மேலும், அனு பிரபாவிடம் ஏமாற்றி வாங்கிய ரூ. 16 லட்சத்தை வைத்து தனலட்சுமி ‘யாத்ரீகா’ என்ற திரைப்படத்தைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அனு பிரபா சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் துப்பாக்கி சுடும் வீராங்கனையிடம் ரூ. 16 லட்சம் மோசடி செய்த தனலட்சுமி மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
