கோவையில் பதுங்கிய திருச்சி ரவுடி கைது…!

கோவையில் பதுங்கி இருந்த திருச்சி ‘ஏ பிளஸ்’ ரவுடியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்டியர்’ என்கிற சண்முகம் (33). இவர், மீது திருச்சி பொன்மலை காவல் நிலையத்தில் ‘ஏ பிளஸ்’ ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருச்சியில் இருந்து தலைமறைவான சண்முகம் கோவை வந்துள்ளார். இங்கு கோவை உக்கடம் புல்லுக்காடு ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள மற்றொரு ரவுடியான ஜூலியட் ஆரோக்கியராஜ் என்பவரின் மனைவியின் வீட்டில் பதுங்கி இருந்தார். கடந்த 6 மாதங்களாக ரகசியமாக தங்கிய அவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே கடந்த ஜூன் 4ம் தேதி அதிகாலை போலீசார் நடத்திய அதிரடி ‘ஸ்டார்மிங் ஆபரேஷனில்’ சண்முகம் தங்கியிருந்த அறையை போலீசார் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து போலீசார் அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அவர் மறைத்து வைத்திருந்த ஒரு இரும்பு கம்பி, ஒரு அரிவாள் மற்றும் சிறிய அளவிலான கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் சண்முகத்தைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சண்முகம் மீது காரைக்கால் நேரவி காவல் நிலையத்தில் வெடிகுண்டு வழக்கு, பொன்மலை காவல் நிலையம், கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம், தஞ்சாவூர் மற்றும் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கொலை முயற்சி, கொள்ளை, வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட 6 முக்கிய வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தலைமறைவாக இருந்த பிரபல திருச்சி ரவுடியை கோவை போலீசார் மடக்கி பிடித்து, ஆயுதங்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *