உரிமை தொகை தராம ஏமாத்திட்டாங்க.. கோவை கலெக்டர் ஆபீஸில் பெண்கள் புகார்..
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்துவதற்கு தேர்தல் நடத்தை விதிகள் படி தடை விதிக்கப்பட்டது. ஆனால் புகார் மனுக்களை பெட்டி வைத்து அதில் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பொதுமக்கள் பலர் இன்று புகார் மனுக்களை பெட்டியில் போட்டனர். மகளிர் உரிமைத்தொகை கேட்டு 300க்கும் மேற்பட்ட பெண்கள் புகார் மனுக்களைப் பெட்டியில் போட்டனர். இதேபோல் இலவச பட்டா மற்றும் வீடு கேட்டு பெண்கள், பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.
இது தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்கள் கூறியதாவது
ஏற்கனவே சில முறை நாங்கள் மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பம் கொடுத்திருந்தோம் ஆனால் எங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் வாடகை வீட்டில் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் எங்களது விண்ணப்பங்களை கார் இருக்கிறது சொந்த வீடு இருக்கிறது என தகுதியின்மை எனக் கூறி நிராகரித்து விட்டார்கள். எங்களைப் போன்ற தகுதி உள்ள சிலருக்கு உரிமை தொகை கிடைக்கிறது. ஆனால் எங்களை மட்டும் நிராகரித்தது ஏன் என தெரியவில்லை.
அதிகாரிகள் முறையாக ஆய்வு நடத்தவில்லை. தகுதி இருந்தும் பலருக்கு உரிமைத்தொகை வழங்காமல் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அரசியல் கட்சியினர் ஆதரவுடன் வழங்கியிருக்கிறார்கள். இது எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது. பெயருக்கு சிலருக்கு கொடுத்துவிட்டு பல பேரைத் தொடர்ந்து ஏமாற்றுவது சரியல்ல என்றனர்.
