கோவையில் ஓட்டு மெஷின்கள் பாதுகாப்பா இருக்குதா… வேட்பாளர்கள் சோதனை…!
கோவை மாவட்டத்தில் வரும் மே 4ம் தேதி ஒட்டு எண்ணிக்கை நடத்தப்படவுள்ளது.
மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 3540 ஓட்டு சாவடிகளில், வாக்கு பதிவு நடந்தது. இதற்காக 15,223 ஓட்டு மெசின்கள் பயன்படுத்தப்பட்டது. பதிவான ஓட்டு மெசின்கள் அனைத்தும் கோவை தடாகம் ரோட்டில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்லூரியில் (ஜி.சி.டி) ஓட்டு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு தொகுதிக்கு ஒரு இடத்தில் என மொத்தம் 10 எண்ணிக்கை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு அருகே 10 இடங்களில் பாதுகாப்பு அறை (ஸ்ட்ராங்க் ரூம்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மையம், ஸ்ட்ராங்க் ரூம் பகுதிகளில் மட்டும் 300 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றை கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டுபாட்டு அறையில் ஒரு தாசில்தார் தலைமையில் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
மாவட்ட கலெக்டர் பவன்குமார் தினமும் ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று திமுக வேட்பாளர்கள் துரை செந்தமிழ் செல்வன், தளபதி முருகேசன், தவெக வேட்பாளர் சம்பத்குமார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி உள்ளிட்ட சிலர் வேட்பாளர்கள் எண்ணிக்கை மையத்திற்கு சென்று ஓட்டு மெசின்கள் வைக்கப்பட்ட ஸ்டிராங்க் ரூம் பாதுகாப்பு எப்படி இருக்கிறது.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் சரியாக இருக்கிறதா, பாதுகாப்பு குறைபாடு எதாவது உள்ளதா என ஆய்வு செய்தனர். அதிகாரிகளிடம் கவுண்டிங் சென்டர் நடைமுறை குறித்த தகவல்களை கேட்டனர். மேலும், எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் அந்தந்த கட்சியின் ஏஜன்டுகள், வேட்பாளர்களின் ஏஜன்டுகள் 24 மணி நேரம் சுழற்சி முறையில் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.
கேமராவில் நேரம், காட்சிகள் சரியாக உள்ளதா, எதாவது கேமரா இயங்காமல் இருக்கிறதா என விடாமல் கண்காணிக்கின்றனர். மின் இணைப்பு துண்டிக்க கூடாது. கேமரா இயக்கம் நிற்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
