கோவையில் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வு…
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) நடத்தப்பட்டு வருகிறது.
எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முது நிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு பொது பொறியியல் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகளை தமிழக அரசு சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது.
நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இத்தேர்வு கோவை மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மண்டல வளாகம், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, பீளமேடு கோவை தொழில்நுட்ப கல்லூரி, நீலாம்பூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி கல்லூரி, காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரி என மொத்தம் 5 மையங்களில் நடந்தது.
இதில், நேற்று நடந்த எம்சிஏ படிப்பிற்கு 889 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 783 பேர் தேர்வை எழுதினர். எம்பிஏ படிப்பிற்கு 2,236 மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில், 1986 பேர் தேர்வு எழுதினர். மேலும், இன்று நடந்த சீட்டா முதுகலை பொறியியல் படிப்பிற்கு 579 மாணவர்கள் தேர்வு எழுத இருந்த நிலையில், தேர்வினை 502 பேர் எழுதினர்.
77 பேர் எழுதவில்லை. மேலும், மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்கள் நடந்த டான்சென், சீட்டா நுழைவுத்தேர்வை 3,271 பேர் எழுதியுள்ளனர். 433 பேர் தேர்வு எழுதவில்லை என கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழக முதன்மையர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.
