கோவையில் பள்ளி வாகனங்கள் விரைவில் ஆய்வு…
கோவை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் அதிகளவு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வாகனங்களின் பிரேக், பாதுகாப்பு கருவிகள், வேக கட்டுபாட்டு கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அடிக்கடி சோதனை நடத்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் பள்ளிகள் துவக்கப்படவுள்ள நிலையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடத்தப்படவில்லை.
மாவட்ட அளவில் 1200க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிகிறது. இதில் சில வாகனங்கள் பள்ளி வாகனங்கள் என்ற பெயரில் வேறு சில பயன்பாட்டில் இருக்கிறது. தகுதி இல்லாத நிலையில், குறிப்பாக வேக கட்டுபாட்டு கருவி இல்லாமல் பல வாகனங்கள் இயக்கப்படுவதாக தெரிகிறது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தினர் ஆய்வு செய்ய வேண்டும்.
தகுதி இல்லாத பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். பள்ளி வாகனங்கள் ஓட்டுநர்கள் பலர் உடல் தகுதி இன்றி இருப்பதாக தெரிகிறது. டிரைவர்களின் நோய் பாதிப்பு, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் என உடல் பரிசோதனையும் நடத்த வேண்டும். பள்ளி வாகனங்களில் வெப் கேமரா, அவசர கால வழி அவசியம் இருக்க வேண்டும்.
சிலர் முறையான பள்ளி வாகனங்களை ஆய்வுக்கு கொண்டு வராமல் மோசடி செய்வதும் நடக்கிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பள்ளி வாகனங்களை சோதனை செய்து பயன்பாட்டில் வைத்திருக்க உத்தரவு வழங்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
