கோவையில் பிளாட்பாரத்தில் தூங்கியவர் கல்லால் தாக்கி கொலை…!
.
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (56). எலக்ட்ரீசியன். இவர் மனைவி இந்திராணி (50). தண்ணீர் பந்தல் பஸ் நிறுத்தம் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு மணிகண்டன் (30) மற்றும் பரமேஸ்வரன் (27) என்ற மகன்கள் உள்ளனர். மணிகண்டன் டிரைவராக பணிபுரிந்து சுந்தராபுரத்தில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
பரமேஸ்வரன் தாயாருடன் வசித்து வருகிறார். ரங்கநாதன் மது குடித்து வந்ததாகவும், குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதன் காரணமாக இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரை பிரிந்து சாலையோரமாக வசித்து வந்தார். இவர் தினமும் தண்ணீர் பந்தலை அடுத்த டெலிகாம் 3வது வீதி பகுதியில் படுத்து தூங்குவது வழக்கம். அதேபோல நேற்று அந்த பகுதியில் படுத்து தூங்கினார்.
காலை அந்த வழியாக சென்றவர்கள் ரங்கநாதன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்தனர். அதில் அவரது அருகில் ரத்தக்கறையுடன் கல் கிடந்தது. யாரோ மர்ம நபர் ரங்கநாதன் தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் ரங்கநாதன் உடலை மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரங்கநாதனிடம் ஏற்கனவே மர்ம நபர் ஒருவர் 2 முறை அவரது புதிய செல்போனை பறிக்க முயற்சி செய்திருந்தது தெரியவந்தது. இதனால் மீண்டும் செல்போன் பறிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது மதுபோதை தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்ட யாராவது தூங்கிக்கொண்டிருந்தவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரங்கநாதன் உடலின் அருகே கிடந்த கல்லில் பதிவாகி இருந்த கைரேகையை கைப்பற்றியும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் ரங்கநாதனை கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வபுரம் மற்றும் ஆர்எஸ் புரம் பகுதியில் சாலையோரம் படுத்து தூங்கிய பிளாட்பார வாசிகள் கொலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலை பீளமேடு பகுதியில் சாலையோரம் படுத்து தூங்கிய எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
