கோவை நகரில் சைபர் மோசடி கும்பலால் 2294 பேர் பாதிப்பு…
கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளின் கைவரிசையால் மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் இருந்து பொதுமக்கள் பணத்தை இழக்காமல் இருக்க ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் சைபர் கிரைம் மோசடி தொடர்ந்து அதிகமாகி வருகிறது. கோவை மாநகரில் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் ரூ.27 கோடியை மக்கள் இழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை சைபர் மோசடி கும்பலிடம் 15 கோடி ரூபாய் பறிகொடுத்துள்ளனர்
ஆன்லைன் மோசடி வருடம்தோறும் தொடர்ந்து அதிகமாகி வருகிறது. இந்த கும்பல் விதவிதமான மோசடிகளில் ஈடுபடுகின்றனர். கூரியரில் போதைப்பொருள் வந்திருப்பதாக கூறி பணம் மோசடி, டிஜிட்டல் அரஸ்ட், போலி போலீஸ் , டிரேடிங், ஆன்லைன் வேலை என மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதனை தடுக்க கல்லூரிகள் ஐ.டி. நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாயிலாக தினமும் விழிப்புணர்வு ரீல்ஸ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அதனை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
கோவை நகரில் நடப்பண்டில் மோசடி கும்பல் தொடர்பாக 2294 பேர் புகார் அளித்துள்ளனர். இதில் பணத்தை பறிகொடுத்ததாக 1,765 பேர் புகார் அளித்துள்ளனர். பணம் சாராத சைபர் கிரைம் குற்றங்கள் அதாவது படங்களை மார்பிங் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் போன்ற புகார்கள் 496 பேர் அளித்துள்ளனர். பணத்தை பொருத்தவரை ரூ. 15 கோடியே இழந்து உள்ளனர்.
அதில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 77 ஆயிரம் முடக்கப்பட்டுள்ளது. ரூ. 1 கோடியே 3 லட்சத்து 24 ஆயிரத்து 108 பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 33. வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
