கோவை மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் விரைவில் தயார்…
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் 12 கட்சிகள் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்றுள்ளது.
சில கட்சிகள் அங்கீகாரமில்லாத நிலையில் இருக்கிறது. அங்கீகாரம் இல்லாக பதிவு செய்த கட்சிகளுக்கு பொதுவான சின்னங்கள் வேட்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வழங்கப்படுகிறது.
சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்த சின்னம் தான் பெற வேண்டியிருக்கிறது. சிலர் முன்னுரிமை அடிப்படையில் பட்டியலில் உள்ள சின்னங்களை பெற முடியும். கடந்த தேர்தலின் போது கிரிக்கெட்பேட், கேஸ் சிலிண்டர், தென்னை மரம், ரேடியோ, பந்து போன்ற சின்னங்கள் அதிகளவு வழங்கப்பட்டது.
நடப்பு தேர்தலில் இதேபோல் 50க்கும் மேற்பட்ட சின்னங்கள் சுயேட்சைகளுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. வேட்பு மனு தாக்கல் முடிந்த பின்னர், அகர வரிசைப்படி தேர்தல் சின்னங்கள் வழங்கப்படலாம். சின்னங்கள் தயார் செய்த பின்னர் தேர்தல் கமிஷன் ஒப்புதலுக்கு அனுப்பி அதன் பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலமாக சின்னம் ஒதுக்கீடு செய்து வழங்கப்படும்.
வேட்பு மனு தாக்கல் செய்தாலும், சின்னம் வழங்கும் வரை வேட்பாளர் பெயர் சொல்லி தான் ஒட்டு கேட்க முடியும். வரும் மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை மனு தாக்கல் நாட்கள், மனு தாக்கல் முடிந்து பரிசீலனை, வாபஸ் முடிந்த பின்னர் தான் இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியாகும்.
அதுவரை வேட்பாளர்கள் சின்னத்திற்காக காத்திருக்க வேண்டும். ஏப்ரல் 7ம் தேதி பிறகு தான் யாருக்கு எந்த சின்னம் என தெரியும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
