கோவையில் பறக்கும் படை சோதனை: கட்டுக்கட்டாக பணத்துடன் சென்ற வியாபாரிகள்…!

கோவை மாவட்டத்தில் தேர்தலில் சட்ட விரோதமாக பொதுமக்களுக்கு பரிசாக பொருட்கள், பணம், நகை மற்றும் இதர பொருட்கள் வழங்குவதை தடுக்க சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

24 மணி நேரம் சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படை நிலையான கண்காணிப்பு படை என 180 குழுவினர் மாவட்ட அளவில் சோதனை செய்கிறார்கள். வாகனங்களின் இயக்கம் ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தேர்தல் பணிகளில் கட்சி, வேட்பாளர்கள் ஈடுபடவில்லை. பொதுமக்கள், வியாபாரிகள், மருத்துவ தேவை, தொழில் அபிவிருத்தி பணிகளுக்கான தொகைகளை பறக்கும் படையினர் பிடித்து தொந்தரவு செய்கிறார்கள் என்ற புகார் அதிகமாகி விட்டது.

மேலும் பொதுமக்கள் பாத்திரம், புடவை, பணம் இருப்பதாக தகவல் தெரிவித்த சில இடங்களுக்கு பறக்கும் படை வாகனங்கள் செல்லவில்லை என்ற குற்ற சாட்டும் இருக்கிறது. மாவட்டத்தில் 97 ஆயிரம் பாத்திரங்கள் பதுக்கி இருப்பதாக புகார் பெறப்பட்ட நிலையில் 800 பாத்திரங்கள் மட்டுமே பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர், பறக்கும் படையினர் வணிக வர்த்தக பகுதியில் வியாபாரிகளின் தினசரி விற்பனை பணத்தை கைப்பற்றுகிறார்கள்.

இதை எப்படி கணக்காக காட்டுவது, நாங்கள் ஜிஎஸ்டி பதிவு செய்திருக்கிறோம். வங்கி கணக்கு உள்ளது என வியாபாரிகள் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி பகுதியில் இரண்டு இடங்களில் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.

கட்டுக்கட்டாக பணம் கிடைத்த நிலையில், வியாபாரிகள் அதற்கான ரசீது ஆதாரங்களை காட்டியுள்ளனர் இருப்பினும் பறக்கும் படையினர் வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பணத்தை வழங்கியுள்ளனர்.

இருகூரில் பாலகிருஷ்ணன் (55) என்கிற பிஸ்கட் வியாபாரி 85 ஆயிரம் ரூபாய் பணத்தை கடை கடையாக வசூல் செய்துள்ளார். இந்த பணத்துடன் அவர் சோமனூர் பகுதியில் சென்ற போது பறக்கும் படையில் சிக்கி விட்டார். அவர் ஆதாரம் காட்டியும் 2 நாளாக அவரது பணத்தை தரவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் சாப்பிட்டு அங்கேயே தங்கி அவர் பணத்தை வசூலித்து விட்டு தான் போவேன் என கடந்த 2 நாளாக காத்திருந்து நேற்று இரவு வாங்கி சென்றார்.

மாவட்ட அளவில், தினமும் 50க்கும் மேற்பட்டவர்கள் பறிமுதல் செய்த பணத்தை திரும்ப பெற ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலக கணக்கு பிரிவில் காத்திருக்கிறார்கள். இந்த பிரிவில் பணத்தை விரைவாக ஒப்படைக்க கூடுதல் அலுவலர்களை நியமித்து பணிகளை விரைவாக முடிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. மருத்துவ தேவைக்காக பணத்துடன் வருபவர்கள், நீண்ட கால சேமிப்புகளுக்கு நாங்கள் என்ன ஆதாரம் காட்ட முடியும். நீங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் குடும்ப சூழ்நிலையை பாருங்கள் பறக்கும் படையினரை கண்ணீர் மல்க அழைப்பது வாடிக்கையாகி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *