கோவை மாவட்டத்தில் டீன் ஏஜ் கர்ப்பம் அதிகரிப்பு குறித்து விசாரணை…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடும்ப வன்முறை, குழந்தை திருமணம், சிறார் கர்ப்பம் தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மகளிர் போலீசார், சைல்ட் லைன் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்திதல் ஏப்ரல் மாத டீன் ஏஜ் சிறார் கர்ப்பம் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மாவட்ட அளவில் ஒன்றியம் வாரியமாக சிறார் திருமணம் தொடர்பாக புகார் குறித்து விசாரிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், 3761 புகார்கள் பெறப்பட்டது. இதில், சிறார் 76 பேர் திருமண வயதிற்கு முன் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது.

18 முதல் 19 வயதில் 59 பேரும், 17 முதல் 18 வயதில் 9 பேரும், 16 முதல் 17 வயதில் 4 பேரும், 15 முதல் 16 வயதில் 3 பேரும், 15 வயதிற்கும் ஒருவரும் கர்ப்பமாக இருப்பதாக புகார் பெறப்பட்டது.

கர்ப்பமான சிறார்களில் கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் 47.4 சதவீதத்தினர் வசிப்பதாக தெரியவந்தது. பொள்ளாச்சியில் 7.9 சதவீதத்தினரும், ஆனைமலையில் 6.6 சதவீதத்தினரும், காரமடையில் 6.6 சதவீதத்தினரும் வசித்து வருகின்றனர். சிறார் கர்ப்பம் தடுக்க சைல்ட் அமைப்பினரும், குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியினர் உரிய முறையில் செயல்பட வேண்டும்.

அடிக்கடி புகார் வரும் பகுதிகளில் ஆய்வு நடத்த வேண்டும். மக்களை சந்தித்து பேசி தகவல் பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. குடும்ப வன்முறை தொடர்பாக கோவை மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் 139 வழக்குகளும், 2025ம் ஆண்டில் 186 வழக்குகளும் பதிவானது.

சிறார் திருமணம், போக்சோ வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டும். துடியலூர், கோவை தெற்கு, மத்திய மகளிர் போலீஸ், மேட்டுப்பாளையம் மகளிர் போலீஸ், புலியகுளம் மகளிர் போலீசில் கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 5 வழக்குகள் முடங்கி போய் இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது.

துடியலூரில் பதிவான வழக்கில் 17 வயதான சிறுமி, திருமணத்திற்கு பின்னர் மாய மாகிவிட்டதாக தெரியவந்தது. தெற்கு அனைத்து மகளிர் போலீசில் இன்ஸ்பெக்டர் இல்லாமல் விசாரணை முடங்கி விட்டதாகவும், மற்ற 3 பகுதிகளில் திருமணம் ஒரு பகுதியிலும் வசிப்பிடம் ஒரு பகுதியிலும் இருப்பதால் விசாரிக்காமல் முடக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் துரிதமாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *