கோவை மாவட்டத்தில் 4.76 லட்சம் மகளிர் உரிமைத்தொகைக்காக காத்திருப்பு…
கோவை மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்தது.
கடந்த 2023ம் ஆண்டு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 4,25,705 பயனாளிகளுக்கு ரூ.1000 வீதம் ஒரு வருடத்திற்கு 510 கோடியே 84 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மகளிருக்கு மாதந்தோறும் அவர்களது வங்கி கணக்கின் மூலம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு ஜீலை மாதம் முதல் நடத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்களின் மூலம்பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மகளிர் உரிமைத்தொகை கோரிய 1,74.599 விண்ணப்பங்களை கள ஆய்வு செய்து தகுதியான 50,648 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக மாதம் ரூ.1000 வீதம் ஒரு மாதத்திற்கு ரூ.5,06,48,000 வீதமும் ஆண்டிற்கு ரூ.60,77,76,000 மகளிர் உரிமைத்தொகையாக அவர்களது வங்கி கணக்கு மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக மொத்தம் 4,76,353 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் ஒரு மாதத்திற்கு 47 கோடியே 63 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய், ஒரு ஆண்டிற்கு 571 கோடியே 62 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தேர்தல் வந்து திமுக ஆட்சி மாறி தற்போது தமிழக வெற்றி கழக ஆட்சி வந்தது. தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதியில் தகுதியான மகளிருக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர், மகளிருக்கு மாதந்தோறும் வழங்கும் தொகை வழங்கப்படவில்லை.
இந்த தொகை வழக்கம் போல் வரும், கூடுதல் தொகையுடன் வரும் என எதிர்பார்த்து காத்திருந்த மகளிர் ஏமாற்றமடைந்தனர். எப்போது தொகை வரும் என தெரியாமல் கலக்கமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக உரிமை தொகை பெறும் பெண்கள் கூறுகையில், “உரிமை தொகை எங்களின் வாழ்வாதாரமாக இருந்தது. எப்படியும் எந்த ஆட்சி வந்தாலும் இந்த தொகை நிறுத்தப்படமாட்டாது என எதிர்பார்த்தோம். அனைத்து முக்கிய கட்சிகளும் உதவி தொகை உயர்த்தி வழங்குவதாக தெரிவித்தது.
ஆனால் தமிழக வெற்றி கழகம் தொகை வழங்காமல் தாமதம் செய்வதால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கிறது. மறு சீரமைப்பு என சொல்லி உதவி தொகை தராமல் பயனாளிகளை நீக்கம் செய்து விடுவார்களோ என்ற கவலையும் இருக்கிறது. கடந்த காலங்களில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து தான் உதவி தொகை வழங்கி வருகிறார்கள். எனவே தடையின்றி எங்களுக்கு உதவி தொகை வழங்க வேண்டும் “என்றனர்.
சமூக பாதுகாப்பு திட்டத்தினர் கூறுகையில், “கடந்த காலங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உரிமை தொகை விண்ணப்பங்கள் இன்னும் நிலுவையில் இருக்கிறது. எங்களுக்கு தொகை வழங்கும் விவரங்கள் எதுவும் தெரியாது.
சென்னையில் இருந்து தான் தொகை வினியோகம் நடத்தப்படுகிறது. பலர் எங்களை அணுகி பணம் கேட்கிறார்கள் மாவட்ட அளவில் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது. சமீ நாட்களில் மேலும் சிலர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள்.
முதல்வரின் தனி பிரிவிற்கும் விண்ணப்பங்கள் அனுப்பி வருகிறார்கள். இதை எல்லாம் பரிசீவனை செய்ய எந்த உத்தரவும் வரவில்லை. மறு உத்தரவு வந்தால் தான் இந்த திட்டத்தின் அடுத்த நிலையில் என்ன என தெரியும் ” என்றனர்.
