கோவை மாவட்டத்தில் மின்சார ரீடிங் எடுக்க ஆள் பற்றாக்குறை…

கோவை மாவட்டத்தில் மின் வாரியத்தில் பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர், உதவியாளர்கள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் 60 சதவீதம் காலியாக இருப்பதாக தெரிகிறது.

காலியிடம் பூர்த்தி செய்ய மின்வாரிய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால் காலி பணியிடம் நிரப்பவில்லை என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கோவை சரகத்தில் சுமார் 6 ஆயிரம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை. மின் வாரியத்தில் அவுட் சோர்ஸ் மூலமாக கூட காலி பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.

இதனால் மின் வாரிய பணிகளில் விதிமுறை மீறல் அதிகமாகி விட்டதாக ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.

வீடு, வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் மீட்டர் அளவு கணக்கெடுப்பு பணி நடத்த போதுமான பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. மாதம் ஒரு முறை எடுக்கவேண்டிய ரீடிங் 2 மாதம் கடந்தாலும் முறையாக எடுப்பதில்லை. ரீடிங் எடுக்காமல் கடந்த முறை கட்டிய மின் கட்டணத்தை திரும்ப கட்டுமாறு தெரிவிப்பதும் நடக்கிறது.

மீட்டர் ரீடிங் குளறுபடியால் மின் நுகர்வோர்கள் அதிக தொகையை செலுத்தவேண்டியிருக்கிறது. நகர், புறநகரில் பரவலாக இந்த நிலையை இருக்கிறது. தொழில், வணிக நிறுவனங்களில் மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தப்படுகிறதா, மின் இணைப்பு திருட்டுத்தனமாக எடுக்கப்படுகிறதா என கண்காணிக்க ஆளில்லாத நிலையிருக்கிறது.

மின் இணைப்புகளில் ஆண்டிற்கு ஒரு முறை கூட மின் முறைகேடு தொடர்பாக ஆய்வு நடத்தப்படுவதில்லை. விவசாய தோட்டங்களில் உள்ள மின்சாரம், மின்வேலிகளில் முறைகேடாக பயன்படுத்தப்படும் மின்சாரம், தெரு விளக்குகளில் இருந்து முறைகேடாக எடுக்கப்படும் மின்சாரம் தொடர்பாக புகார் தெரிவித்தாலும் கள ஆய்வு செய்ய ஆளில்லாத நிலையிருக்கிறது.

மின் பணியாளர்கள் கூறுகையில், “அரசு சார்பு துறைகளில் மின் வாரியத்தில் தான் அதிக பணியிடம் காலியாக இருக்கிறது. பல இடங்களில் மின் கம்பங்களில் ஏற்படும் பழுது, தெரு விளக்குகளில் ஏற்படும் பழுதுகளை சரி செய்ய பணியாளர்கள் இல்லாத நிலையிருக்கிறது.

மழை வெயில் காலங்களில் அதிக இடங்களில் மின் தடை ஏற்படுவதற்கு ஆளில்லாத நிலை தான் முக்கிய காரணம் போதுமான பணியாளர்கள் இல்லாததால் பாதிப்பு அதிகமாகி விட்டது. காலியிடங்களை நிரப்ப பல முறை கோரிக்கை விடப்பட்டுள்ளது. தெரு விளக்கு, தனி நபர் வீடுகளில் பழுது சரி செய்யும் பணிகளில் கால தாமதம் ஏற்படுகிறது. அதிக பாதிப்பு ஏற்படும் முன், ஆள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். “என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *