பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு… அமைச்சர் சம்பத்குமார் பேட்டி
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
புத்தகங்கள் டெண்டர் விடப்பட்ட இடத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டுள்ள விவகாரத்தில், தவறு நடந்திருப்பது 100 சதவீதம் நிரூபிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகங்கள் எங்கள் பார்வைக்கு கொண்டு வரும் சூழலை கவனத்தில் எடுத்துக்கொள்வோம். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்துவார்கள்.
இதற்காக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கு தரமான சைக்கிள் வழங்க வேண்டும் என்பதே முதல்வரின் கொள்கை, மாணவ, மாணவிகள் விரும்பும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உறுதித் தன்மையும் சிறப்பான குறிப்புகளும் கொண்ட சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும், டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள் 300 கோடி ரூபாய் டெண்டர் சப்ளை செய்ய தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். தகுதி வாய்ந்த நிறுவனத்திற்கு வழங்குவது தான் உரிய நடைமுறை நாம் ஒரு பட்ஜெட்டை வைத்துள்ளோம். சில நண்பர்கள் யார் சொல்லி பேசுகிறார்கள் என தெரியவில்லை.
முதல்வரின் ஆட்சியில் நிர்ணயிக்கப்பட்ட தொகையில் தான் இவை நடைபெறும். அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் என்ன வேண்டுமானாலும் வரலாம். விற்பனை ஆகாத பிராண்டுகளை கூட விலை குறைத்து காட்டுவார்கள். கடந்த முறை வாங்கிய விலையை விட குறைவான விலையில் தான் தற்போது வாங்குகிறோம். குற்றச்சாட்டு யார் வேண்டுமானாலும் வைக்கலாம். உண்மை தன்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
