கோவை நகரில் போக்குவரத்து விதிமீறல் 14125 வழக்குகள் பதிவு…
கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே பதிவு எண்ணுடன் இரு பைக்குகள் சாலையில் இயங்குவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அதன் பேரில், போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அந்த பதிவு எண் வேறு ஒரு வாகனத்திற்குரியது என்பது கண்டு பிடிக்கப்பட்டது.
உட னடியாகச் செயல்பட்ட போலீசார், அந்த இரு பைக்குகளையும் ஒட்டி வந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ரூ.7,900 அபராதம் விதித்ததுடன், வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் கோவை மாநகரில் போலி நம்பர் பிளேட்டுகளுடன் அதிகளவில் பைக்குகள் வலம் வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலின் பேரில் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பயனாக கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகளவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகன தனிக்கையின் போது போலி நம்பர் பிளேட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, போலி நம்பர் பிளேட்டுகள் பொருத்தி வரும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதன் பயனாக நடப்பாண்டில் போலி நம்பர் பிளேட் வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 11,116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தது. நடப்பாண்டில் அதே காலக்கட்டத்தில் 14,125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து கேமராக்கள் மற்றும் ஏஎன்பிஆர் கண்காணிப்புக் கேமராக்களிடம் இருந்து தப்பவும் சிக்னல் மீறல், தலைக்கவசம் அணியாமல் செல்வது போன்ற அபராதங்களை தவிர்க்கவும் சில இளைஞர்கள் வேண்டும் என்றே போலி நம்பர் பிளேட்டுகளை பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்ற போலி பதிவு எண்கள் கொண்ட பைக்குகள் சங்கிலி பறிப்பு, கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடவும் பயன்படுத்தப்படலாம். இதனால், சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை கண்டறிவதில் பெரும் சவாலை ஏற்படுத்தும்.
குறைபாடுள்ள மற்றும் விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகளுக்கு 500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதேவேளையில் போலி நம்பர் பிளேட் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் வாகனம் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.
கடந்த ஜூலை மாதத்தில் போலி நம்பர் பிளேட் குறித்து நடத்தப்பட்ட தீவிர வாகன சோதனையில் தினமும் சுமார் 100 வழக்குகள் வீதம் ஒரே மாதத்தில் 3,000 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டன.
அங்கீகரிக்கப்படாத நம்பர் பிளேட் தயாரிக்கும் கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர்கள் அபராதத்திற்கு பயந்து நம்பர் பிளேட்டுகளை மறைப்பதோ அல்லது போலி எண்களை பயன்படுத்துவதோ சட்டப்படி கடுமையான குற்றமாகும்.
போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் குற்றுச் செயல்களில் ஈடுபடுவதை பொறுத்து கொள்ள முடியாது
