மதுக்கரை மரப்பாலம்… ரூ.66 கோடி சர்வீஸ் ரோடு டெண்டர் தாமதம்…

கோவையில் ரூ.66.50 கோடியில் தார்ச்சாலை போடும் பணிக்கு டெண்டர் இறுதி செய்யப்படாமல், இழுபறி நிலையில் உள்ளது.

மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுக்கரை மரப்பாலம் பகுதியில் ரயில்வே கடவு பாலம் கட்டும் பணி ரூ.100 கோடி திட்ட மதிப்பில் நடக்கிறது. ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணைந்து இந்த பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில், இதே பகுதியில் 800 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு சுவருடன்கூடிய அகலமான தார்ச்சாலை அதாவது சர்வீஸ் ரோடு அமைக்க ரூ.66.50 கோடி திட்டமதிப்பில் டெண்டர் விடப்பட்டது.

கடந்த ஆண்டு துவங்கவேண்டிய இத்திட்ட பணி ஒப்பந்தம் விடாமல் தொடர்ந்து தாமதம் ஆகி வந்தது. தற்போது இந்த பணிக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்டது. இதில், 14 ஒப்பந்த நிறுவனங்கள் பங்கேற்றன. ஆனால், டெண்டர் திறந்து ஒப்பந்தம் இறுதி செய்யாமல் நெடுஞ்சாலை துறையினர் காலதாமதம் செய்து வருகின்றனர்.

உள்ளூர் நிறுவனங்களுக்கு ஒப்பந்த பணி கொடுப்பதா? அல்லது வெளிமாநில நிறுவனங்களை தேர்வு செய்வதா? என்பதில் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. எந்த காரணமும் இன்றி டெண்டர் இறுதி செய்யப்படாமல் காலதாமதம் செய்வதில் உள்நோக்கம் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில் எந்த திட்டப்பணிகளும் நடப்பாண்டில் துவக்கப்படவில்லை. பல்வேறு திட்டப்பணிகளுக்கு ஒப்பந்தம்கூட செய்யப்படவில்லை. இந்த நிலையில், இந்த டெண்டரையும் இறுதி செய்யாமல் இழுத்தடிப்பது பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

இதுபற்றி மதுக்கரை பகுதி மக்கள் கூறுகையில், “தமிழகம்-கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கான முக்கிய பாதையாக பாலக்காடு மெயின் ரோடு இருக்கிறது. மரப்பாலம் பணி காரணமாக இந்த பாதை மூடப்பட்டு, மாற்றுப்பாதை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இதன்காரணமாக,

மதுக்கரை, குரும்பபாளையம், மதுக்கரை மார்க்கெட், பைபாஸ் ரோட்டில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக முண்டியடிக்கிறது. மாநில நெடுஞ்சாலை துறையினர் அலட்சியம் காரணமாக போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *