ரூ 6 கோடியில் கோவை மைல்கல் ‘சுரங்க பாலம்’ கட்டும் பணி விரைவில் துவக்கம்…
கோவை மதுக்கரை மைல் கல் பகுதியில் இருந்து மாதம்பட்டி வரை 11.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த பைபாஸ் ரோடு போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. மைல் கல் பகுதியில் 30 கோடி ரூபாய் செலவில் மஞ்சு பள்ள ஓடையின் மீது 30 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது.
இந்த பணி முடிய மேலும் ஒரு ஆண்டு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சுகுணாபுரம், மதுக்கரை ரோடு செல்லும் வாகனங்களுக்காக தரைமட்ட சுரங்க பாலம் (vehicle underpass ) அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
6 கோடி ரூபாய் செலவில் இந்த சுரங்க பாலம் கட்டும் பணி விரைவில் துவக்கப்படும். இந்த பாலம் இருந்தால் தான் சுகுணாபுரம் அறிவொளி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்றுவர முடியும். இல்லாவிட்டால் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் ஏறி வாகனங்கள் திரும்பி வர வேண்டும்.
இல்லாவிட்டால் மேம்பாலத்துக்கு இடையே உள்ள நுழைவுப் பகுதி வழியாக சென்று திரும்பி வர வேண்டும்.
புதிய சுரங்க பாலம் கட்டும் பணிக்கான ஆயத்தப் பணிகளை நெடுஞ்சாலை துறையின் திட்ட பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் இதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. கடந்த ஆண்டு இந்த சுரங்க பாலம் பணி துவக்கி இருக்க வேண்டும். ஆனால் மைல் கல் மேம்பாலம் கட்டும் பணி தாமதமானதால் சுரங்க பாலம் கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
சுரங்க பாலம் கட்டும் பணிக்காக குடிநீர் குழாய் மற்றும் தரைவழி கேபிள் போன்றவற்றை மாற்றம் செய்ய நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
