27.44 லட்சம் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு விநியோகம் துவக்கம்…!

கோவை மாவட்டத்தில் 27.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

வரும் 23ம் தேதி வாக்கு பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வீடு வீடாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் போட்டோவுடன் கூடிய ‘பூத் சிலிப்’ வழங்கப்பட்டது. இப்போது போட்டோ பூத் சிலிப் கிடையாது. அதற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு போட்டோ இன்றி வழங்கப்படவுள்ளது.

கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகளுக்கான வாக்காளர் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி கடந்த 9ம் தேதி துவங்கியது. கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக 10 ஜெராக்ஸ் மெசின் வைத்து அனைத்து தொகுதிக்கும் வாக்காளர் தகவல் சீட்டு அச்சடிப்பு பணி நடத்தி வருகின்றனர்.

இது மட்டுமின்றி வாக்காளர் வழிகாட்டி மேப்பும் அச்சடிக்கப்பட்டு வருகிறது. 27.44 லட்சம் வாக்காளர் தகவல் சீட்டு 10 சதவீதம் கூடுதல் தாள்களுடன் அச்சடிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் வால்பாறை தொகுதியில் பெயரை தோட்ட தொழிலாளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் செய்யும் பணி இன்று துவங்கியது. கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் தொழிலாளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் செய்தார்.

கோவை மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வீடு வீடாக பூத் லெவல் ஆபீசர்கள் மூலமாக வாக்காளர் தகவல் சீட்டு விரைவில் வழங்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

மாவட்ட அளவில் 10 தொகுதிகளுக்கு தகவல் சீட்டு அச்சடிக்க வேண்டியுள்ளது. 3 நாளாகியும் பணி முடியவில்லை. ஒரிரு நாளில் பணி முடியும். குறிப்பாக கோவை நகர் பகுதியில் உள்ள ஓட்டு சாவடிக்கான வாக்காளர் தகவல் சீட்டு அச்சடிக்கும் பணி தற்போது நடக்கிறது. ஒரு வார காலம் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *