கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏற இன்று முதல் அனுமதி

தென் கைலாயம் என அழைக்கப்படும் கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலை கோயிலில் கிரி மலை தரிசனத்திற்காக இன்று காலை முதல் அனுமதி வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் இறுதி வரை இந்த கோயிலில் மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது. முதல் நாளிலே பல ஆயிரம் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மலையேறினர். சித்ரா பௌர்ணமி நாளில் சுமார் மூன்று லட்சம் பேர் மலை ஏறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் மலையேற வசதியாக மலை அடிவாரத்தில் மூங்கில் குச்சிகள் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சீசனில் சுமார் 30 முதல் 35 லட்சம் பேர் மலை ஏற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. வெள்ளை விநாயகர் கோயில் வரை உள்ள முதல் மலை அதிக படிக்கட்டுகள் கொண்டது.

அதற்கு அடுத்து ஆறு மலை ஏறி வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க முடியும். மூன்றாவது மற்றும் நான்காவது மலையில் பக்தர்கள் குடிநீர் பெறுவதற்கு சுனை நீர் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கோயில் அடிவாரம் மற்றும் மலைப்பகுதியில் யானை நடமாட்டம் இருக்கிறது. பக்தர்களுக்கு யானை மற்றும் இதர வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்களுக்கு அடிவாரத்தில் அன்னதானமும் மதிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *