கோவை வெள்ளிங்கிரி மலை மகா சிவராத்திரி விழா;1 லட்சம் பேர் சுவாமி தரிசனம்..!
மகா சிவராத்திரியை முன்னிட்டு பூண்டி வெள்ளிங்கிரி மலை கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ஏழுமலை ஏறி கிரிமலை ஆண்டவர் தரிசனம் செய்தனர். குறிப்பாக காலை நேரத்தில் சூரிய உதயத்தை மலை உச்சியில் இருந்து காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியை முன்னிட்டு மலைக்கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் மூங்கில் குச்சி உதவியுடன் கடும் வெயிலில் மலையேறி வெகு நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இது தொடர்பாக பக்தர்கள் கூறுகையில்,” கடந்த ஆண்டை விட தற்போது கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எப்படியாவது மலை ஏறி காலை நேரத்தில் சுவாமியை பார்த்து விட வேண்டும் என்ற ஆவலில் வந்தோம். அதன்படி சாமி தரிசனம் செய்தோம். கோயில் வளாகத்தில் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்த போதிலும் தடை இன்றி வேகமாக செல்ல முடிந்தது ,” என்றனர்.
சிவராத்திரியை முன்னிட்டு கோயில் அடிவாரம் பகுதியில் போலீஸ் மற்றும் வனத்துறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். யானை நடமாட்டம் இருப்பதால் இரவு முழுவதும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். பூண்டியில் இருந்து கோயில் வரை பல இடங்களில் ரோட்டோரங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழாவை காண பக்தர்கள் குவிந்தனர். அந்தப் பகுதியிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
