கோவையில் கள்ள சந்தையில் கேஸ் சிலிண்டர் விற்பனையா..? கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை..!
சமையல் கேஸ் சிலிண்டர் நுகர்வு தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள், அரசு துறை அலுவலர்கள், தனியார் ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், பேக்கரி, தனியார் விடுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் பேசுகையில், “
வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை பதுக்கி கள்ள சந்தையில் விற்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான புகார்களை வழங்கல் பிரிவு, குற்றப்புலனாய்வு துறையிடம் புகார் தரலாம். கேஸ் சிலிண்டர் தொடர்பான புகார்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை உள்ளது. இதனை 0422-2300569 என்ற தொலைபேசியில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். ” என்றார்.
இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் சிலிண்டர்கள் இருப்பு விவகாரம், உணவகங்கள், விடுதிகளில் சமையல் கேஸ் மாற்று ஏற்பாடாக மின்சார அடுப்புகளை பயன்படுத்துதல் குறித்து விவாதிக்கபட்டது. மாவட்ட அளவில் மின் பயன்பாடு அதிகமாகும் நிலை குறித்தும் பேசப்பட்டது. சமையல் கேஸ் சிலிண்டர்களை தனியார் பங்கிற்கு சென்று நிரப்பக்கூடாது அப்படி செய்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் மதுரா, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
