பாஜக 7 தொகுதி கூட ஜெயிக்காது… மேலிடத்திற்கு அண்ணாமலை அனுப்பிய மெயில்…!
அதிமுக, பாஜ கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சிக்கு என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் கோவையில் 9 தொகுதிகள் அதிமுகவிற்கும், பாஜ ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் கோவையை குறி வைத்தனர். அதனால் கடந்த முறை அதிமுக கூட்டணியில் தெற்கு தொகுதி மட்டும் வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை அண்ணாமலைக்கு ஒரு தொகுதி, வானதி சீனிவாசனுக்கு ஒரு தொகுதி பெற்றுவிட வேண்டும் என பாஜவினர் தீவிரமாக இருந்தனர்
ஆனால் இந்த முறையும் அதிமுக கூட்டணியில் கோவையில் ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் வானதி சீனிவாசன் வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
அதேபோல கிணத்துக்கடவு தொகுதி தனக்கு கிடைக்கும் என அண்ணாமலையில் தீவிர ஆதரவாளரான வசந்தராஜன் பணிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அவருக்கும் கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கவில்லை.இதனால் பாஜவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தொண்டர்களுக்கு திருப்தி இல்லை என்றும், அனைவரும் அதிருப்தில் உள்ளார்கள் என்றும் பாஜ தமிழக தேர்தல் பொறுப்பாளர் பி.எல்.சந்தோஷ்க்கு இமெயில் மூலம் அண்ணாமலை புகார் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த கடிதத்தில் பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளில் 7 தொகுதி கூட வெற்றி பெறுவது சந்தேகம் எனவும், அதிமுக போட்டியிட்டு தோல்வியுற்ற தொகுதிகளை பாஜக தலையில் கட்டிவிட்டதாகவும் குறிப்பாக திமுக, காங்கிரஸ் வலுவாக உள்ள தொகுதிகளை பாஜவுக்கு அதிமுக திட்டமிட்டே ஒதுக்கிவிட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் பாஜக வலுவாக உள்ள கோவையில் 1 தொகுதியும், திருப்பூரில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி உள்ளதாகவும் இது கட்சி வளர்ச்சியை பாதிக்கும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
