கோவையில் ஓடும் பஸ்ஸில் கதவு வழியாக தவறி விழுந்த மூதாட்டி சாவு
கோவை புதூரில் இருந்து இன்று காலை தனியார் டவுன் பஸ் காந்திபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
பஸ்ஸில் கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த கோமதி (62) என்பவர் பயணம் செய்தார். அவர் தனது பஸ் ஸ்டாப் வந்ததும் எழுந்து செல்ல முயன்றார் . ஆனால் பஸ் வேகமாக சென்றதால் கம்பியை பிடிக்க அவர் தடுமாறினார்
இந்த நிலையில் அவர் பஸ் கதவு வழியாக தவறி கீழே விழுந்தார் .இதில் பலத்த காயமடைந்த அவர் சிறிது நேரத்தில் இறந்து விட்டார். இது தொடர்பாக கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். பஸ் அதி வேகமாக சென்றதால் மூதாட்டி தடுமாறியதாக தெரிகிறது. அவர் மட்டும் இன்றி மேலும் சில பெண்களும் பஸ்ஸிலிருந்து இறங்கும்போது தடுமாறி உள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி பதிவு வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
அரசு பஸ்களில் கதவுகள் மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் தனியார் பஸ்கள் கதவுகள் அமைக்கப்படாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது . இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
