சுயேச்சை வேட்பாளர்களுக்கு 7ம் தேதி சின்னம் ஒதுக்கீடு…!

கோவை மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் சின்னம் ஒதுக்கீடு செய்யும் வரை பெயரை சொல்லி ஓட்டு கேட்க நிலை இருக்கிறது. தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 184 சின்னங்கள் அறிவிக்கப்பட்டது.

இதில் 3 சின்னங்கள் பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. விசில் சின்னம் சுயேட்சை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தமிழக வெற்றி கழகத்திற்கு இந்த சின்னம் வழங்கப்படும். எதாவது தொகுதியில் இந்த சின்னத்தில் தமிழக வெற்றி கழகத்தினர் போட்டியிடாமல் இருந்தால் சுயேட்சை வேட்பாளர் இந்த சின்னம் பெற வாய்ப்புள்ளது. ஏசி, அலமாரி, நடை வண்டி, பலூன், வளையல், பேட், பேட்ஸ்மேன், பேட்டரி டார்ச், நெக்லஸ், பெல்ட், பெஞ்ச், சைக்கிள் பம்பு, பைனாகுலர், பிஸ்கட், கரும்பலகை, படகு, பாக்ஸ், ரொட்டி, பிரட் டோஸ்டர், செங்கல், பெட்டி, பிரஷ், பக்கெட், கேக், கால்குலேட்டர், கேமரா, கேன், குடமிளகாய், கார்பெட், கேரம் போர்டு போன்ற சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதில் தென்னை மரம், கேஸ் சிலிண்டர், பேட், வளையல் போன்ற குறிப்பிட சில சின்னங்களுக்கு போட்டி இருக்கும் என தெரிகிறது. வீட்டு உபயோக பொருட்கள், தினசரி பயன்பாடு உள்ள மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பொருட்களை தேர்தல் கமிஷன் சின்னமாக அறிவித்துள்ளது. சில சின்னங்கள் பிற மாநிலங்களில் பதிவு பெற்ற கட்சிகள் பயன்படுத்துகிறது. இதை ஆய்வு செய்த பின்னர் ஒதுக்கீடு செய்ய தேர்தல் பிரிவினர் திட்மிட்டுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் கூறுகையில், “சின்னங்கள் ஏராளமாக

இருக்கிறது. ஒரே சின்னத்தை 2 பேர் அதற்கு மேற்பட்டவர்கள் கேட்கும் போது குலுக்கல் நடைமுறை கொண்டு வரப்படும். கடந்த காலங்களில் குலுக்கல் முறையில் சுயேட்சை சின்னங்கள் வழங்கப்பட்டது. 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் முடியும். அதற்கு பின்னர், 7ம் தேதி பரிசீலனை முடிந்து சின்னங்கள் ஒதுக்கப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் உறுதி செய்யப்பட்டதும் சின்னங்கள், வேட்பாளர்கள் பெயர்கள் அகர வரிசைப்படி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் பேலட் பேப்பர் தயார் செய்யப்படும். இதில் அகர வரிசைப்படி தான் பெயர்கள் சின்னம் இடம் பெறும். இன்சியல், பட்ட பெயர், ஊர் பெயர் அகர வரிசை பட்டியலில் சேர்க்கப்படமாட்டாது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தாலும் அகர வரிசையில் தான் பெயர், சின்னம் இருக்கும். சுயேட்சை வேட்பாளர் பெயர் அ என்ற எழுத்தில் ஆரம்பித்தால் அவர் பெயர் ஓட்டு பதிவு மெசினில் முதல் பட்டனில் இடம் பெறும், “என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *