கோவையில் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய மாணவர் சாவு
தர்மபுரி மாவட்டம் பீடம் நேரி பகுதியை சேர்ந்தவர் முகேஷ் குமார்( 23). இவர் கோவை பேரூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி ஃபார்ம் படித்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது நண்பர்கள் எட்டு பேருடன் வெள்ளிங்கிரி மலை ஏறினார் .
அப்போது ஐந்தாவது மலைக்கு சென்ற போது இவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து இறந்தவரின் சடலம் டோலி கட்டி மலையிலிருந்து கீழே இறக்கப்பட்டது. நடப்பாண்டில் வெள்ளிங்கிரி மலை ஏறிய ஆறு பேர் இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது .
உடல் நலன் இல்லாதவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் இதர நோய் குறைபாடுகள் இருந்தால் அவர்கள் மலை ஏறும் போது மிகுந்த பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிங்கிரி மலை தொடர்பாக சமீப காலமாக யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ரீல்ஸ் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.
இதை பார்த்து மலை ஏறும் ஆசையில் சிலர் வருகிறார்கள். போதுமான பயிற்சி உடல் திறன் இல்லாத நிலையில் சிலர் மலை ஏற மிகுந்த சிரமப்படுகின்றனர். சில பக்தர்கள் மலையேற முடியாமல் திரும்ப வந்து விடுகிறார்கள்.
உடல் நலன் பாதிப்பு உள்ளவர்கள் மலையேறும் திறன் இல்லாதவர்கள் வெள்ளிங்கிரி மலை ஏற வர வேண்டாம். மேலும் தங்களது ரத்த அழுத்தம் நாடித்துடிப்பு சோதனை செய்த பின்னர் மலையேற வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
